Wednesday, February 28, 2007

ஜி-யின் காதல் கடிதம்

இப்பதிவு நமது பதிவர் ஜி-யைக் குறிப்பிடுவது அல்ல. நான் மதுரையில் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த போது நடந்த சம்பவம். நாங்கள் சுமார் 20 எம்சிஏ,எம்பிஏ மாணவர்கள் ஒரே மாடியில் அடுத்தடுத்த அறைகளில் தங்கியிருந்தோம். அங்கு எங்கள் குழுவில் ஒருவன் 'ஜி'. அவன் பெயர் 'ஜி' அல்ல. எங்களை விட வயதில் மூத்தவனாக இருந்ததால் நாங்கள் அவனுக்கு மரியாதையாக 'ஜி' என்று பெயர் சூட்டி இருந்தோம். 'ஜி' எனது அறைக்குப் பக்கத்து அறையில் தங்கியிருந்தான். எங்கள் நண்பர்களில் அப்போது காதலித்துக் கொண்டிருந்த ஒரே ஆள் என்ற பெருமையும் அவனையே சாரும். வேறு யாருக்கும் காதலிகளோ, தோழிகளோ அப்போது கிடையாது. ஆனால் 'ஜி' மட்டும் கல்லூரிக்கு வரும் முன்பே ஊரில் இருக்கும் அவன் மாமா மகளைக் காதலித்துக் கொண்டிருந்தான். நாங்கள் ஸ்டடி அவரில் நேரத்தை வீணாக்காமல் அனைவரும் அவனைச் சுற்றி அமர்ந்து அவன் காதல் கதைகளை வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்போம். ஆனால் சில நாட்களில் காதலர்களுக்குள் ஊடல் ஏற்பட்டு இருவரும் பேசாமல் இருப்பதாக 'ஜி' வருத்தத்துடன் சொன்னான். இருப்பினும் நாங்கள் நேரத்தை வீணாக்காமல் அவனது பழைய காதல் கதைகளை சிரத்தையுடன் கேட்டு வந்தோம். அவ்வப்போது ஆறுதலும் சொல்லி வந்தோம்.

இந்நிலையில், எங்களுக்கு பருவ இடைத்தேர்வு வந்தது. தேர்வு மதியம் தான். ஆகவே காலையில் தனியாக விடுதியில் பேருக்கு புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்போம். ஒருநாள் நண்பகல் 12 மணிக்கு பொழுதுபோகமல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். நான் மெஸ்ஸில் சாப்பாடு தயாராகி விட்டதா என்று பார்ப்பதற்காக கீழே சென்று பார்த்து விட்டு திரும்பும் போது 'ஜி'க்கு ஒரு கடிதம் வந்திருப்பதைப் பார்த்தேன். அனுப்புநர் முகவரியில் அவன் ஆள் பெயரும், ஊரும் இருந்தது. உடனே மேலே சென்று "நம்ம ஜி-க்கு அவன் ஆள் லெட்டர் போட்டிருக்கு" என்று கூவிக் கொண்டே சென்று ஜி-யிடம் கடிதத்தைக் கொடுத்தேன். ஜி-யின் காதலில் அக்கறை கொண்ட எங்கள் நண்பர்கள் அனைவரும் மொத்தமாக அவரவர் அறைகளை விட்டு வெளியே ஓடி வந்தார்கள். எதற்கு? அடுத்தவன் காதல் கடிதத்தை ஓசியில் படித்து ஜொள்ளு விடத்தான். ஏற்கனவே பொழுது போகாமல் மொக்கை போட்டுக் கொண்டிருந்த நாங்கள் அனைவரும் அவனைச் சுற்றி நின்று கொண்டு "ஏய் படிடா படிடா" என்று கெஞ்சிக் கொண்டிருந்தோம். கூட்டத்தையும், எங்கள் ஆர்வத்தையும், வேகத்தையும் பார்த்து பயந்து போன 'ஜி', கடிதத்தைப் படிப்பதற்காக உடனே குளியலறைக்குள் ஓடிச் சென்று கதவை மூடிக் கொண்டான். பதிவுலகக் கூற்றுப்படி 'தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்டான்'.

காதல் கடிதத்தைப் படிக்க முடியாத ஆத்திரத்தில் ஜியைப் பழிவாங்க முடிவு செய்தோம். விடுதிக் குளியலறையின் மேல் பகுதி திறந்தவெளியாகத்தான் இருக்கும். மொத்தம் இருப்பது நான்கு குளியலறைகள் தான். ஆகவே மற்றவர்கள் குளிப்பதற்காக வெளியில் ஒரு தொட்டி நிறைய தண்ணீர் வைத்து இருப்பார்கள். நாங்கள் அனைவரும் அவரவர் வாளிகளில் தண்ணீரைத் தொட்டியில் இருந்து எடுத்து 'ஜி' ஒளிந்திருந்த குளியலறையின் மேல் பகுதி வழியாக ஊற்றத் தொடங்கினோம். அவன் வெளியே வரமுடியாமல் வெளியிலும் தாழ்ப்பாள் போட்டு கதவை மூடிவிட்டோம். ஜி "டேய் விடுங்கடா, விடுங்கடா" என்று கெஞ்சத் தொடங்கினான். சுமார் கால்மணி நேரம் அபிசேகம் செய்ததும் கதவைத் திறந்து விட்டோம். மழையில் நனைந்த கோழி மாதிரி ஆகியிருந்தான். எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஜி-க்கும் தான்.

நாங்கள் வெளியில் வைத்து அவனை மொத்து மொத்தென மொத்தினோம். "ஏண்டா! உனக்கு உன் ஆள் உன்னிடம் பேசவில்லையென்றால் அதை எங்களிடம் சொல்லிப் புலம்பத் தெரியுது. லெட்டர் போட்டா எங்கள்ட்ட காட்டத் தெரியாதா?. எடுடா லெட்டரை" என்றோம். "என்னது லெட்டரா? டேய் அது எங்கனே எனக்குத் தெரியலடா" என்றான். இருபது பேர் சேர்ந்து தண்ணீரை ஊற்றியதில் கடிதம் கந்தலாகி அதுவும் தண்ணீரோடு சேர்ந்து போய்விட்டது. பிறகு சாயங்காலம் ஜி உடனடியாக அவனது காதலியைக் காண ஊருக்குக் கிளம்பினான். நாங்கள் அவனைப் படுத்தியபாட்டுக்குப் பிராயச்சித்தமாக டீ வாங்கிக் கொடுத்து ஊருக்கு வண்டி ஏற்றி விட்டு வந்தோம்.

நன்றி : இ-கலப்பை, ப்ளாக்கர், தமிழ்மணம் மற்றும் தேன்கூடு

4 comments:

கார்மேகராஜா said...

எல்லாம் சரிதாங்க!

அந்த லெட்டர்ல இருந்த விசயம் என்னன்னு நண்பர் ஊருக்கு போயிட்டு வந்து சொன்னாரா இல்லையா?

sundar said...

சஸ்பென்ஸ் அப்படியே தான் இருக்கு....என்ன தான் இருந்தது அந்த கடிதத்தில்

ஜி said...

//இப்பதிவு நமது பதிவர் ஜி-யைக் குறிப்பிடுவது அல்ல.//

நல்லவேளை சொன்னீங்க... இல்லீனா உங்க மேல மான நஷ்ட வழக்குப் போடலாம்னு இருந்தேன் :))))

இது தொடரா? இல்ல முடிச்சிட்டீங்களா? உங்க நண்பன் உங்களுக்குப் பண்ணின அதே குறும்ப எங்களுக்கும் பண்றீங்களே.. அதுக்கப்புறம் என்னாச்சு? என்ன? ஏது? ன்னு வெளாவெறியா சொல்லுங்க. நாங்களும் ஓசில காதல் கதைப் படிக்கிறதுன்னா....

Yogi said...

அதிகமான வேலைப்பளு காரணமாக பின்னூட்டம் போட இயலவில்லை. இது தொடர் இல்லை. ஜி தன் காதலியிடம் தான் லெட்டரைப் படித்ததைப் போலவே பேசியுள்ளான்.அவன் ஆளிடம் பொத்தாம் பொதுவாகக் கேள்விகள் கேட்டுள்ளான். விசயம் ஒன்றும் பெரிதில்லை. ஜி தன்னிடம் பேசாமலிருப்பது அவளுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருந்ததால் அவள் அவனிடம் தான் எதாவது தெரியாமல் தவறு செய்திருந்தால் மன்னிக்கும்படி வேண்டிக்கொண்ட கடிதம் தான் அது.