Monday, August 20, 2007

நாங்கள்லாம் ஜெயில் பறவைங்க .. தெரியுமுல்ல ..

"லஞ்சம் வாங்கினதுக்காக சிறையில் போட்டாலும் நான் திருந்த மாட்டேன். லஞ்சம் வாங்குவது என் பிறப்புரிமை. நாங்கள்லாம் ஜெயில் பறவைங்க .. தெரியுமுல்ல .." என்பது போல் போன வாரம் இராமநாதபுரத்தில் ஒரு அரசு அதிகாரி செய்த செயல் மிகவும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரில் இருக்கும் அரசு அலுவலகங்களில் ஒன்று பொதுப்பணித்துறை - கட்டிடம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலுவலகம் (Public Works Department - Building Construction and Maintenance). இங்கு செயற்பொறியாளராகப் (Executive Engineer) பணிபுரிபவ(ந்தவ)ர் வள்ளிமுத்து. இராஜபாளையத்துக்காரர். சில வருடங்களாக இராமநாதபுரத்தில் பணிபுரிந்து வருகிறார். பைசா சுத்தமாக பெர்சண்டேஜ் கணக்குப் பண்ணி லஞ்சம் வாங்குவதில் கில்லாடியாம்.

பொதுவாக எல்லா அரசு அலுவலகங்களிலும் ஒப்பந்தகாரர்களுக்குப் பில் பாஸ் பண்ணும் போது, அலுவலர்கள் ஒப்பந்தகாரர் கொடுக்கும் அன்பளிப்புத் தொகையை அவர்களுக்குள் பங்கு போட்டுக் கொள்வது வழக்கம். இவர் கொஞ்சம் பேராசைக்காரர் போல.

அப்படித்தான் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கும் வேலையை குத்தகைக்கு எடுத்த ஒப்பந்தகாரரிடம் 20,000 லஙஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டார். முதலில் ஒப்பந்தகாரரிடம் லஞ்சம் கேட்டிருக்கிறார். அவர் கொடுக்க மறுக்கவே, பணிகளைத் தாமதமாகச் செய்வதாக சுமார் ஒரு லட்சம் அபராதம் போட்டுவிட்டாராம். பின்னர் மீண்டும் லஞ்சம் கேட்கவே அந்த ஒப்பந்தகாரர் முதலில் 10,000 மட்டும் கொடுத்திருக்கிறார். அதெல்லாம் பத்தாது இன்னும் 10,000 வேணும் என்று அதிகாரி கேட்கவே, பொறுமையிழந்த ஒப்பந்தகாரர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்ய முடிவு செய்துள்ளார்.

இவர் ஏற்கனவே இதே போல் வருவாய்த் துறையில் இரண்டு அதிகாரிகளையும், பொதுப்பணித்துறையில் இரண்டு அதிகாரிகளையும் லஞ்சம் கேட்டதற்காக மாட்டிவிட்டிருக்கிறாராம். தைரியமானவர்தான். ஒப்பந்தகாரர் லஞ்ச

ஒழிப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கும் முன்னர் அந்த அலுவலகத்தில் இருந்த சில நெருக்காமான ஊழியர்களிடம் தான் அதிகாரியை ரெண்டில் ஒன்று பார்க்கப் போவதைத் தெரிவித்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அதிகாரியிடம் பக்குவமாக விசயத்தைச் சொல்லியிருக்கின்றனர். "லஞ்சம் வாங்கீராதீங்க. மாட்டிக்குவீங்க. அந்தாளு மோசமானவர். ஏற்கனவே இது மாதிரிப் பண்ணியிருக்காரு. நீங்க எப்படியும் இன்னும் கொஞ்ச நாளில் ஓய்வு பெறப் போகிறீர்கள். நல்ல பேரோட நீங்க போகணும் சார்" என்று கெஞ்சாத குறையாகச் சொல்லியிருக்கின்றனர். "என்னய்யா பிழைக்கத் தெரியாத ஆளா இருக்கீங்க. நான் இவன மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருக்கேன்" என்று தெனாவெட்டாகப் பதில் சொல்லியிருக்கிறார்.

மறுநாள் ஒப்பந்தகாரர் 10,000 லஞ்சப் பணத்தைக் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் வசமாக மாட்டிக் கொண்டார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர்களிடம் புகார் வந்தவுடன், அவர்கள் கொடுக்கும் பணத்தைத் தான் அந்தக் குறிப்பிட்ட அதிகாரியிடம் கொடுக்க வேண்டுமாம். அந்த ரூபாய் நோட்டுக்களின் எண்களைக் குறித்து வைத்திருப்பராம். அதுபோல ரூபாய் நோட்டுக்களின் மீது ஏதோ பொடி ஒன்றையும் தடவி இருப்பார்களாம். கவரில் இருந்து பணத்தை எடுத்துத் தொட்டவுடன் கையில் ஏதோ வண்ணமாக ஒட்டிக்
கொள்ளுமாம். இதைத் தான் கையும் களவுமாகப் பிடிப்பது என்கிறார்களோ?

பின் காவல்துறை அவர் தங்கியிருந்த அறையைச் சோதனை போட்ட போது கவர் பிரிக்காமல் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் சிக்கியது. பின்னர் பிடிபட்ட அதிகாரியை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது பெயிலில் எடுக்க யாரும் வரவில்லை. அரசு அலுவலர் சங்கமும் ஒதுங்கிக் கொண்டது. அதிகாரிக்கு மிகவும் நெருங்கிய நண்பரான ஒரு உதவிப் பொறியாளர் வந்து பெயிலில் எடுத்து வந்திருக்கிறார்.

இதற்கு அப்புறம்தான் ஹைலைட். வீட்டுக்கு வந்த அதிகாரி சும்மா இருக்காமல் மற்றொரு ஒப்பந்தகாரருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது பில்களையெல்லாம் வீட்டுக்குக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறார். அந்தப் பிலகளில் முன்தேதியிட்டுக் கையொப்பமிட்டு அவரிடம் 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கியிருக்கிறார். :O . ரிஸ்க் எடுக்குறது இவருக்கு ரஸ்க் சாப்புடுறமாதிரி போல.

என்ன தில்லு? என்ன தெனாவெட்டு? கொஞ்சம் கூடக் குற்ற உணர்வு இல்லாமல் கைதாகி வீட்டுக்கு வந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் லஞ்சம் வாங்கியிருக்கிறார். விசயத்தை மோப்பம் பிடித்த காவல் துறை அந்தாளைப் பெயிலில் எடுத்த அதிகாரியைப் பிடித்து ஏறிவிட்டார்களாம். "அவனெல்லாம் பாவம்ன்னு நீ அவனுக்கு பெயில் எடுத்தியே? இப்பப் பாரு பயமேயில்லாம திரும்பவும் லஞ்சம் வாங்கியிருக்கான். நான் திரும்பவும் கேஸ் போட்டால் அது உனக்குத் தான் சிக்கல். ஒழுங்கா இருக்கச் சொல்லு அவனை" என எச்சரித்திருக்கிறார்கள்.

இப்போ அந்த அலுவலகத்தில் இருக்கும் எல்லா அதிகாரிகளும் ஒட்டு மொத்தமாக அருகில் உள்ள ஊர்களுக்கு மாற்றல் கேட்கும் முடிவில் இருக்கிறார்களாம். ஏன்னா பார்க்கிற எல்லோரும் "உங்க EE லஞ்சம் வாங்கி மாட்டிக்கிட்டாராமே? நீங்களும் அந்த மாதிரி வாங்கி மாட்டிக்காதீங்க" என்று அறிவுரை கூறுகிறார்களாம்.

மேலே சொன்னது இரண்டு வாரங்களுக்கு முன் நடந்தது. ஒரு வாரம் விடுப்பு போட்டுட்டு வூட்டுல குந்தினுருந்ததுனால தாமதம்.

1 comment:

வடுவூர் குமார் said...

குத்தகைக்காரரிடம் பணம் வாங்குவது என்பது வேலை என்று யாராவது சொல்லியிருப்பாங்க... (இதெல்லாம் பால பாடம் அங்கே)
என்னங்க நீங்க அவரை வேலை கூட பார்க்க விடமாட்டேன் என்கிறீர்கள்.