Monday, December 31, 2007

தொல்லை கொடுக்கும் கனவுகளும், பல்லி விழுந்த பலன்களும்

எனக்கும் பல சமயங்களில் (இன்னமும்) இரண்டு கனவுகள் தோன்றி என்னைத் தூக்கத்திலிருந்து விழிக்கச் செய்துவிடுகின்றன. அதில் முதலாவது நான் நண்பர்களுடன் சேர்ந்து வெண்குழல்வத்தியை ஆழமாக இழுத்து வட்ட வட்டமாகப் புகைவிடுவது போலத் தோன்றுவது. கனவிலேயே, வீட்டிற்குப் போனால் மாட்டிக் கொள்வோமே என்றும் சரி ஹால்ஸ் ஒன்று வாங்கிப்போட்டுக் கொள்ளலாம் என்று யோசனையும் தோன்றும். அவ்வளவுதான் பட்டென முழித்துப் பார்த்தால் நடுநிசியைத் தாண்டியிருக்கும். இதில் முக்கியமான விசயம் என்னன்னா எனக்கு தம்மடிக்கும் பழக்கம் கிடையாது. பொதுவாக சிலர் தாங்கள் விரும்பும் ஒரு விசயம் கனவில் தோன்றும் என்று சொல்லுவார்கள். எனக்கு அப்படியெதுவும் தம்மடிப்பதில் விருப்பமில்லை. இருந்தாலும் ஏன் இந்தக் கனவு வருகிறதுன்னு தெரியவில்லை.

அடுத்தது நான் இன்னமும் பள்ளியில் படிப்பது போலவும் இன்னும் சிறிது நாளில் பரீட்சை நடக்கப்போவது போலவும் "ஐயையோ சமூக அறிவியல் பாடம் இன்னமும் தொட்டுக் கூடப் பார்க்கவில்லையே!" என்று மிகவும் கவலைப்படுவது போலவும் தோன்றும். பள்ளியைவிட்டு வெளியேறி பத்து ஆண்டுகள் ஆகியும் இன்னமும் இந்தக் கனவும் தோன்றிக் கொண்டுதான் இருக்கிறது. அதுவும் சமூக அறிவியல் எல்லாம் பத்தாம் வகுப்பில்தான். அதிகாலையில் நிகழும் கனவுகள் பலிக்கும் என்று வேறு சொல்வார்கள். இந்தக் கனவுகள் திரும்பத் திரும்ப வருகின்றனவே தவிர வேற ஒன்னும் செய்யலை. பொதுவாக கனவை வெளியில் சொல்லிவிட்டால் பலிக்காது என்று சொல்வார்கள். நான் வெளியில் சொல்லிவிட்டேன். இனியாவது அவை தொல்லை கொடுக்காமல் இருக்குமா எனப் பார்ப்போம்.

அடுத்த தொல்லை இந்தக் கிரகப்பெயர்ச்சிப் பலன்கள். முதலில் குருப்பெயர்ச்சி வந்தது. அடுத்து சனிபெயர்ச்சி. இப்போ புது வரவு ராகு-கேது பெயர்ச்சி. இது போதாதென்று தின, வார, மாத மற்றும் பிறந்தநாள் பலன்கள் வேறு. இதில் எதை நம்புவது எதை விடுவது என்று மகா குழப்பமாக உள்ளது. முதலில் தினத்தந்தியில் வார பலன்கள் மட்டும் படித்து வந்தேன். அதில் அவன் நாலு சொல்லியிருந்தால் அதில் ஒன்று பலித்தது. அப்படி எதுவும் பலிக்கவில்லையென்றாலும் நடந்த சம்பவங்களை ராசிபலன்களுடன் பொருத்திப்பார்க்கும் மனநிலை தோன்றியவுடன் அவற்றைப் படிப்பதை நிறுத்தி விட்டேன். என்னைப் பொறுத்தவரை எந்தப் பலன்களையும் நம்பாமல் சாமியை மட்டும் கும்பிட்டு விட்டு மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்துவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்.

இணைய விகடனில் போட்டிருந்த குருப்பெயர்ச்சிப் பலன்களில் சிம்மராசிக்கு எல்லாம் சூப்பர், டக்கர் என்று போட்டிருந்தார்கள். அதற்கு ஒருவர் பின்னூட்டம் போட்டுக் கிழித்திருந்தார். "ஏன்யா இரண்டு மாசம் முன்னாலதான் சனிப்பெயர்ச்சிக்கு மகா கேவலமா பலன்கள் போட்டிருந்த. அடுத்த சனிப்பெயர்ச்சி அடுத்த வருசம் தான். இப்ப என்னன்னா குரு பெயர்ச்சி பலன்ல ஆகா ஓகோ போட்டிருக்கீங்க. இதில் எது உண்மை? எதை நாங்கள் நம்புவது?"ன்னு. அவர் கேட்பதும் சரிதானே? இதற்கு விகடனின் பதில் மவுனம்.

அடுத்து நாள்காட்டியில்‌ ப‌ல்லி விழும் ப‌ல‌ன்னு ஒன்னு போட்டிருக்காங்க. ப‌ல்லி சுவ‌ரில் இருந்து த‌வ‌றி ந‌ம்ம‌ மேல‌ விழுந்துட்டா அதுக்கு என்ன‌ ப‌ல‌ன்னு சொல்லியிருப்பாங்க‌. நான் எட்டாம் வ‌குப்பு ப‌டிக்கும்போது வீட்டில் அம‌ர்ந்து பாடம் ப‌டித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு ப‌ல்லி என‌து இட‌து கையில் விழுந்துவிட்ட‌து. அடடா என‌ நினைத்து கையைக் க‌ழுவிவிட்டு நாள்காட்டியைத் திருப்பிப்பார்த்தால் அதில் போட்டிருந்த‌ ப‌ல‌ன் என்ன‌ தெரியுமா ?

இடது கை - ம‌ர‌ண‌ம்.

ஐயையோன்னு ப‌த‌றி அடிச்சி ப‌ல்லி இட‌து கையில்தான் விழுந்த‌தான்னு ந‌ல்லா உறுதி செய்த‌பிற‌கு, ச‌ரி வ‌ல‌து கைக்கு என்ன‌ன்னு பார்த்தா ம‌றுபடியும் அதிர்ச்சி தான்.

வ‌ல‌து கை - ம‌ர‌ண‌ம்.

ஒரு வேளை ப‌ல்லிக்குத்தான் அந்த‌ப் ப‌ல‌னோ என்ன‌மோ? :))) ன்னு மனசைத் தேற்றிக்கொண்டேன். அப்ப‌டின்னாலும் ப‌ல்லி நாள்காட்டியெல்லாம் ப‌டிக்குமா என்ன‌?

நான் நம்பாத மற்றொரு விசயம் வாஸ்து. ஏன் இந்த‌ வாஸ்தெல்லாம் இப்போ வ‌ந்த‌துதானே. அந்த‌க் கால‌த்திலெல்லாம் ம‌னையடி சாஸ்திர‌ம் என்ற‌ திசை அடிப்ப‌டையிலான‌ முறை வைத்துத்தான் பெரிய பெரிய வீடுகள் எல்லாம் கட்டியிருக்கிறார்கள். அதே வீடுகளை அதைக் கட்டியவர்களின் மகன்களும், பேரன்களும் இடித்து அலங்கோலமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். வாஸ்துப்படி தென்மேற்குத்திசையில் வீடு உயரமாயிருக்க வேண்டும் என்பதற்காக மொட்டைமாடியில் செங்கற்களை கோபுரம் போல அடுக்கிவைத்திருக்கின்றனர் சிலர். அவை கீழே விழுந்து எவர் மண்டையையாவது உடைத்தால்தான் தெரியும் வாஸ்துவும் அதனால் கிடைக்கும் பலன்களும். வாழ்க்கையில் சில தோல்விகள் வரும்போது எதைத் தின்றால் பித்தம் தெளியும் என அலைவர்களை இந்த வாஸ்துவாதிகள் கெட்டியாகப் பிடித்து விடுகிறார்கள்.

இவை எல்லாமே சிந்திக்கவைக்கும் விசயங்கள் தான். இன்றளவும் என்னாலும் நம்பமுடியாத சில வியப்பூட்டும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அதை அப்புறமா சொல்லுறேன்.

Saturday, December 29, 2007

தமிழ்நாட்டுல பிறந்துட்டு டாஸ்மாக்குன்னா என்னன்னு தெரியலன்னா தூக்குல தொங்கு !

ஆர்குட் ஒரு சமுதாய வலைத்தளம்கிறது ரொம்பவே சரிதான். நாலும் இருந்தாத்தான் சமுதாயம். அதுனாலதான் தமிழ்நாட்டுத் தண்ணி வண்டிங்க எல்லாம் ஒரு குழுமத்தில இருக்காங்க.

அட ஆமாம். டாஸ்மாக்குக்கும் ஒரு குழுமம் இருக்குங்க. அதில் 1001 பேர் உறுப்பினர்கள். செம ரகளையாக இருக்கு குழுமம். "தமிழ்நாட்டுல பிறந்துட்டு டாஸ்மாக்குன்னா என்னன்னு தெரியலன்னா, தூக்குல தொங்கு"ன்னு சொல்றாங்க அதுல.

அதன் தொடர்புடைய குழுமங்கள் எல்லாம் ரம், ஒயின், பீர் குழுமங்கள் தான். இது பத்தாதுன்னு "தண்ணியைப் போட்டுட்டு வீட்டுக்குப் போவீங்களா இல்ல அங்கயே குப்புற விழுந்துருவீங்களா?" "சரக்குக்கு சூப்பர் சைட்டிஷ் எது?" "சிறந்த சரக்கு எது?" "சரக்கடிக்க சிறந்த இடம் எது?"ன்னு கருத்துக்கணிப்பு வேற. பார்க்க படங்கள்.





இக்குழுமத்தின் முகவரி http://www.orkut.com/Community.aspx?cmm=7519409

ம். யாரையும் குறை சொல்ல முடியாது. ஏன்னா சமுதாயம்னா நாலும்தான் இருக்கும்.

Thursday, December 27, 2007

'ஐ' க்குப் பதில் 'அய்' ஏன்?

'ஐ' அல்லது 'ஐ' சேர்ந்த உயிர் மெய் எழுத்துக்களை எழுதும் போது சிலர் 'ஐ'க்குப் பதில் 'அய்' என்று எழுதுகின்றனர்.

உதாரணம்
மையம் - மய்யம்

இது ஏன்? இப்படி எழுதுவது சரி என்று பள்ளியில் தமிழ் இலக்கணப் புத்தகங்களில் படித்ததாகவும் நினைவில்லை. பொதுவாக தூய தமிழில் எழுதுபவர்கள் வடமொழிஎழுத்துக்களைத் தமிழ்ப்படுத்தி எழுதுவர் (உ-ம். ராமதாஸ் - ராமதாசு). அதைப் போல 'ஐ' என்பது தமிழ் எழுத்து என்பது மறந்து போய் வடமொழி எழுத்து என்று நினைத்து ;) இப்படி எழுதுகிறார்களா அல்லது தங்களைப் பிறரிடமிருந்து தனியே இலக்கியவாதிகளாகக் காட்டிக் கொள்ள இப்படி எழுதுகிறார்களா என்று தெரியவில்லை. அல்லது ஏற்கனவே எதாவது இலக்கண விதிகள் இருக்கின்றனவா?

சரி இப்படியே போனால் என்னாவாகும் என்பது கீழே.

ஐஸ்வர்யா - அய்ஸ்வர்யா
ஐடியா - அய்டியா
ஐயம் - அய்யம்
பண்ணை- பண்ணய்
கலைஞர் - கலய்ஞர்

நான் யாரய்யும் குறய்சொல்லவில்லய். எனக்குப் புரியவில்லய். தயவு செய்து விளக்கவும். ;)

Thursday, December 20, 2007

ப்ளாக்கரில் other option நீக்கம் ! பதிவர்கள் மகிழ்ச்சி !

மு.கு - சன் செய்திகள் போல வாசிக்கவும்.

ப்ளாக்கரில் other option மூலம் பின்னூட்டம் இடும் முறை நீக்கப்பட்டுவிட்டது. இதனால் உலகெங்கிலும் உள்ள தமிழ் வலைப்பதிவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்பு ப்ளாக்கரில் other optionல் பின்னூட்டம் இடுபவரின் பெயரையும், அவரது வலைப்பக்க முகவரியைச் சொல்வதற்கும் (Name, Website) இரண்டு Text boxகள் இருந்தன. இதனால் போலியாகப் பலபதிவர்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்களது பெயரில் அவர்களது வலைத்தளமுகவரியையோ அல்லது அவர்கள் profile எனப்படும் பதிவர்ர் தகவல் பக்கத்தின் முகவரியையோ கொடுத்துப் பின்னூட்ட்ம் போட்டுவிட்டு அந்த பதிவர்களுக்குத் தொல்லையும் சிரமமும் கொடுத்துவந்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட தமிழ்பதிவர்கள் எலிக்குட்டி மற்றும் புகைப்பட சோதனைகளைக் கண்டுபிடித்து உலக ப்ளாக்கர் வரலாற்றில் அழிக்கமுடியாத இடம் பிடித்தனர். இருந்தாலும் இவையெல்லாம் தெரியாத பல புதிய பதிவர்கள் அந்த அப்பாவிப் பதிவர்கள் மேல் கோபம் கொண்டிருந்து அவர்கள் பதிவுகளில் பின்னூட்டம் போடாமல் புறக்கணித்தும், பதிவுகளை Flag செய்தும் வந்தனர்.

இப்போது அந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்யும் வகையிலும், தமிழ் வலைப்பதிவர்களிடையே நல்லுறவை வளர்க்கவும் ப்ளாக்கர் முடிவு செய்து other optionக்குப் பதிலாக இப்போது Nickname என்று ஒரே ஒரு text box மட்டுமே கொடுத்துள்ளது. இதனால் யாரும் யாருடைய வலைப்பக்க முகவரியையோ, பதிவர் தகவல் பக்கத்தின் முகவரியையோ கொடுத்துப் பின்னூட்டம் போட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த தமிழ் வலைப்பதிவர்கள் சிலர் "இது எப்போதோ செய்திருக்கவேண்டியது. சில வருடங்கள் முன்பே செய்திருந்தால் சில பல ரணகளங்களைத் தவிர்த்திருக்கலாம். எப்படியோ வரவேற்கவேண்டிய ஒன்று" என்றனர். மேலும் சில அனானிகளை அனானியாகத் தொடர்பு கொண்டு கேட்டபோது "தங்கள் புரட்சி தொடரும்" என்றும். "Nickname, Anonymous optionகளைக் கொண்டே பலரையும் கலாய்ப்பது தொடரும்" என்றும் தெரிவித்தனர்.

பொன்வண்டு - ஃபாதர் நியூஸ்

Thursday, December 13, 2007

சிந்திக்க வைத்த 'அன்பே சிவம்'

கடவுள் எல்லோருக்கும் பொதுதான். அன்பே சிவம் படத்தில் வரும் வசனம் ஒன்று எனக்கு மிகவும் பிடிக்கும். "காசு கொடுப்பதால் ஒருவனுக்கு ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொடுத்தால் அவர் கடவுள் அல்ல. கூலி.". எல்லாம் நம் மனதில் தான் இருக்கிறது. நாம் நல்லது செய்தால் கடவுள் நமக்கும் நல்லது செய்வார் என்று எண்ணுவதே சரி. அதை விடுத்து உண்டியலில் பணம் போடுவதும், குடம் குடமாகப் பாலாபிசேகம் செய்தாலும் அதில் நமது சுயநலமே ஒளிந்திருக்கிறது என்பது அந்தக் கடவுளுக்குத் தெரியாதா என்ன?

சரி அப்போ கடவுள் இல்லையா? இப்படியெல்லாம் திடீர்னு கேட்டா எப்படி? குழந்தையாயிருக்கும் போதே கடவுள் நம்பிக்கையை சொல்லியிருக்கிறார்கள் வீட்டில். எனவே அந்த நம்பிக்கையையும் விடமுடியாது. பகுத்தறிந்து பார்த்தால் கடவுள் எல்லாம் கிடையாது என்றே ஒருபுறம் தோன்றுகிறது. அதையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஏனென்றால் சிறு வயதில் ஏற்பட்ட கடவுள் நம்பிக்கை.

சிறுவயதில் ஏற்பட்ட நம்பிக்கையை ஆராய்ந்தால் அதில் பல ஓட்டைகள். வாராவாரம் கோவிலுக்குப் போ, விளக்கேற்றி வழிபடு எதாவது தோஷம் இருந்தால் பரிகாரம் செய் என்றெல்லாம். நமக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் பகுத்தறிவினால் கடவுளை ஆராயும் போது ஒரு கடவுள் எல்லா மக்களையும் சமமாக அல்லவா நினைக்க வேண்டும்? அவர் எதற்கு சிலருக்கு மட்டும் துன்பங்களைத் தருகிறார்? வெள்ளிக்கிழமை எலுமிச்சையில் விளக்கேற்றினால் துன்பங்களை நீக்குவார் என்பதெல்லாம் சும்மா (எலுமிச்சையில் விளக்கேற்றினால் கடவுளுக்கு என்ன கிடைக்கப்போகிறது? அவர் என்ன அவ்வளவு அல்பமா?) என்றெல்லாம் தோன்றுகிறது.

எனவே கடவுள் நம்பிக்கையையும் விடமுடியாமல் பகுத்தறிவையும் விடமுடியாமல் கடவுளுக்குப் புதிய அர்த்தம் கொடுக்கிறோம். அதுதான் "கடவுள் எல்லோரையும் சமமாக நினைக்கிறார். அவருக்கு இந்த சடங்குகள் எல்லாம் தேவையில்லை. நமக்கு நாம் நல்லவனாக இருந்தால் - மனசாட்சிக்கு விரோதமின்றி - கடவுளே நம்மை ஏற்றுக்கொள்வார்" என்று கடவுள் நம்பிக்கையையும், பகுத்தறிவையும் சேர்த்து ஒரு புதிய விளக்கம் தரவேண்டியிருக்கிறது.

நானும் கடவுள் நம்பிக்கைக்கும், பகுத்தறிவுக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமாகும் ஒருவன்தான்.

Sunday, December 09, 2007

கவர்ந்திழுத்த கல்கியின் படைப்புகள்



நூலகத்தில் வார, மாத இதழ்கள் போரடிக்க ஆரம்பித்த போது கொஞ்சமாக பிற பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்கள் பக்கம் பார்க்கத் தொடங்கினேன். அப்பொழுது சின்ன சின்னக் கதைகள் அடங்கிய புத்தகங்களை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். அனைத்தும் சிறுவர்களுக்கான நீதிக்கதைகள் தான். பின்னர் பஞ்ச தந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள் என கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினேன் :).

ஒருமுறை அப்படிப் புத்தகங்களைத் தேடியபோது மாட்டியது தான் 'அப்புசாமி படம் எடுக்கிறார்'. ஏற்கனவே பாக்கியம் ராமசாமியின் சில கதைகளை வார இதழ்களில் படித்திருந்ததால் இந்தப் புதினத்தை ஆவலுடன் படித்தேன். ஒரே சிரிப்புதான் வீட்டில் நாவலைப் படிக்கும் போது. அப்புசாமி, சீதாப்பாட்டி, ரசகுண்டு அடிக்கும் லூட்டி யப்பப்பா. சரியான நகைச்சுவை நாவல். பின் 'மதன் ஜோக்ஸ்' பாகம்1 & 2 ஆகியவையும் படித்தேன். எல்லாம் தரமான நகைச்சுவை. இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா? என்று எண்ண வைத்தவை. முன்ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத்திருடன் சிங்காரவேலு அப்புறம் ஒரு சின்னப்பையன் லூட்டி அடிப்பது (பெயர் மறந்து போச்சு).

இப்படி சின்னப்புள்ளைத்தனமாகவே இருந்த என்னையும் மாற்றியது கல்கியின் எழுத்துக்கள் தான். கல்லூரியில் இளங்கலை படிக்கும் போது விடுமுறைக்கு என் சித்தி வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கே என் சித்தப்பா கல்கியின் 'பொன்னியின் செல்வன்' 6 பாகங்களையும் வர்த்தமானன் பதிப்பகத்தில் இருந்து வாங்கியிருந்தார். பொன்னியின் செல்வன் அருமையான புதினம் என்று பள்ளியில் பாடங்களில் படித்தது. "எதுக்கு சித்தப்பா பொன்னியின் செல்வன் வாங்கியிருக்கீங்க?". "நான் சின்னவனா இருக்கும் போது இதெல்லாம் கிடைக்காதுடா. நூலகத்தில் தான் இருக்கும். அதுவும் ஒரு பாகம் இருந்தால் இன்னொன்னு இருக்காது. அப்படியே கிடைத்தாலும் ஒரு வாரத்தில் திரும்பக் கொடுக்கணும். ரொம்ப ஆசையா இருக்கும். ஆனா படிக்கக் கிடைக்காது. ரொம்ப நல்லா இருக்கும். அதுனாலதான் இப்போ வாங்கியிருக்கேன்"ன்னு என்னிடத்தில் ஆசையைத் தூண்டிவிட்டுட்டார்.

முதலில் என்னப்பா இது சுத்தமான தமிழில் இருக்குன்னு கொஞ்சம் கஷ்டப்பட்டு ரெண்டு பக்கம் படிச்சா சும்மா பிச்சுக்கிட்டு போகுது கதை. வந்தியத்தேவன் வீராணம் ஏரிக்கரையில் குதிரையில் வருவது தொடங்கி ஆழ்வார்க்கடியான், அருள்மொழிவர்மர்(இராஜராஜ சோழர்), குந்தவை, வானதி, பழுவேட்டரையர்கள், நந்தினி, கந்தமாறன், சேந்தன் அமுதன், பூங்குழலி, ஆதித்த கரிகாலன் என்று அனைவரையும் நேரில் பார்த்து, அவர்கள் செய்வதையெல்லாம் நேரில் பார்ப்பது போல ஒரு தோற்றத்தை உண்டு பண்ணியது பொன்னியின் செல்வன். விடாமல் 18 நாட்கள் தொடர்ந்து படித்து நாவலை முடித்தேன். அதற்கப்புறம்? திரும்பவும் இன்னொரு முறை படிக்கத் தொடங்கினேன் :). இன்றளவும் என் மனதில் மட்டுமல்ல தமிழர்களின் மனதில் முதலிடம் எப்போதும் பொன்னியின் செல்வனுக்குத்தான். கல்கி என்ற இப்படிப்பட்ட மாமனிதர் நம்மிடையே வாழ்ந்தார் என்பது தமிழர்க்கு எவ்வளவு பெருமை.

அடுத்துக் கொஞ்சநாள் எதுவும் படிக்க முடியாமலே இருந்தது. பின் வேலை தேடி சென்னைக்கு வந்தபோது என் அண்ணனின் அறையில் என் அண்ணனின் நண்பர் 'பார்த்திபன் கனவு'ம், 'சிவகாமியின் சபதமு'ம் வாங்கிவைத்திருந்தார். ஆனால் நான் படித்தால் என் அண்ணனுக்குக் கோபம் வரும். "ஒழுங்கா வேலை தேடுறதுக்குப் படி" என்பான். எனவே என் அண்ணன் வேலைக்குப் போன பிறகு பார்த்திபன் கனவு எடுத்துப் படிப்பேன். பின்னர் எனக்கும் வேலை கிடைத்த பிறகு தைரியமாக சிவகாமியின் சபதமும் எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். சிறந்த நாவல். ஆனால் பொன்னியின் செல்வன் அளவுக்கு இல்லையோ? என்று எண்ணுவேன். ஒருவேளை சிவகாமியின் சபதத்தை முதலில் படித்திருந்தால் பொன்னியின் செல்வன் சரியில்லையோ? என்று சொல்லியிருக்கக்கூடும் :). அதெல்லாம் சும்மா இதுவும் நல்ல புதினம்தான் என்று கொஞ்சநாள் ஆகவும் புரியத்தொடங்கியது. 'அலை ஓசை' சரித்திர நாவலோ என எண்ணி படிக்க ஆவலுடன் புரட்டிய எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமே. ஆனாலும் முழுவதையும் விரும்பிப் படித்தேன்.

பின்னர் சாண்டில்யனின் 'யவனராணி'யும், 'மன்னன் மகளு'ம் படிக்கக் கிடைத்தன. நல்ல விறுவிறுப்பான நாவல்கள் தான். ஆனால் வர்ணனைகள்? அப்பப்பா அவ்வளவு 'A'. கல்கியின் நாவல்களில் கொஞ்சம் கூட இந்த மாதிரி வர்ணனைகள் இல்லை. அவ்வளவு நல்ல எழுத்தாளர் அவர். இந்த வகையிலும் கல்கியின் மதிப்பு நம்மிடையே உயர்ந்து விடுகிறது.

இப்போது கல்கியின் நாவல்களை PDFல் படிக்கிறேன். காலத்தின் கோலம்? 'கள்வனின் காதலி', 'தியாக பூமி', 'சோலைமலை இளவரசி', 'பொய்மான் கரடு', 'மோகினித்தீவு' மற்றும் சிறுகதைகள் என அனைத்தையும் கணினியில்தான் படித்தேன்.

இந்த முறை புத்தகக் கண்காட்சியில் குறைந்தது ஐந்து, ஆறு புத்தகங்களாவது வாங்கிவிட வேண்டும் என எண்ணியிருக்கிறேன். சுஜாதாவின் 'ஸ்ரீரங்கத்து தேவதை'களில் மனதைப் பறிகொடுத்த நான், இந்த முறை முன்னொரு காலத்தில் தூர்தர்ஷனில் பார்த்த 'என் இனிய இயந்திரா'வும் வாங்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன்.

அனைத்து கல்கியின் நாவல்கள் மற்றும் சிறுகதைகளுக்கு இங்கே கிளிக்கவும்.

Friday, December 07, 2007

முகமூடி வீரர் மாயாவி


பள்ளியில் படிக்கும் போதே எனக்கு புத்தகங்கள் படிப்பதில் ரொம்பவே ஆர்வம் இருந்தது. (பாடப் புத்தகங்கள் அல்ல :) ). என் அண்ணன் மட்டும் நூலகத்திற்குச் சென்று வந்து "இன்னிக்கு நான் 'ஜலதீபம்' படித்தேனே. இருபது பக்கம்" என்று சொல்லும் போது தான் எனக்கும் அந்த ஆர்வம் தொற்றியிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

என் அண்ணனுக்கும் எனக்கும் அப்பவே பங்காளிச் சண்டை. நான் அவனுடன் சேர்ந்து நூலகத்துக்குப் போறதெல்லாம் நடக்காத காரியம். நான் நூலகத்திற்குத் தனியாகச் சென்றால் நூலகர் அனுமதிக்கவில்லை. நான் சின்னப்பையன் புத்தகங்களைக் கிழித்து விடுவேன் என்று நூலகர் எண்ணியிருப்பார் போல. நான் அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் அவர் இல்லாத நேரத்தில் விகடனை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தபோது "டேய் புத்தகத்தை வைடா" என்ற சத்தம் கேட்டுத் திரும்பிப்பார்த்தால் நூலகர் நிற்கிறார். "அண்ணே!" என்றேன் பயத்துடன். "வைச்சுட்டுப் போடா!" என்று விரட்டியபோது கண்களில் நீர் முட்டியது.

பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் நூலகத்துக்குள்ளேயே நுழைய முடிந்தது. நூலகத்தில் அமர்ந்து சோறு, தண்ணியில்லாமல் வார இதழ்களைப் படித்துக் கொண்டிருப்பேன். பாக்யாவில் கேள்வி-பதில் பகுதியில் பாக்யராஜ் சொல்லியிருக்கும் குட்டிக்கதைகளை விரும்பிப் படிப்பேன். அப்புறம் ராணி காமிக்ஸ். இதில் வரும் முகமூடி வீரர் மாயாவி கதையும், ஜேம்ஸ்பாண்ட் துப்பறியும் கதையும் மிகவும் பிடிக்கும்.

முகமூடி வீரர் மாயாவி ஆப்பிரிக்காவில் காட்டுக்குள் இருந்து கொண்டு அங்குள்ள விலங்குகளையும், மலைவாழ்மக்ககளையும் காப்பாற்றுவார். அவரது இருப்பிடம் மண்டை ஓட்டுக் குகை. அவருக்குத் துணை ஒரு ஓநாய். அதன் பெயர் மறந்துவிட்டது. காட்டுக்குள்ளே இருந்தாலும் நாட்டில் நடக்கும் எல்லா விசயங்களும் அவருக்குத் தெரியும். மண்டை ஓட்டுக் குகைக்குள் ஒரு பெரிய நூலகம், அவரது முன்னோர்களது கல்லறைகள் எல்லாம் இருக்கும். கொள்ளைக்காரர்களுக்கும் விலங்குகளை வேட்டையாடுபவர்களுக்கும் அவர் சிம்ம சொப்பனம். அவர் கையில் ஒரு மண்டை ஓடு பொறித்த மோதிரம் அணிந்திருப்பார். அவர் சண்டை போடும் போது எதிராளியின் முகத்தில் அதை வைத்து ஒரு குத்து விடுவார். அவ்வளவுதான் அந்த மண்டைஓட்டுக் குறி அவன் முகத்தில் பதிந்து விடும். அதை யாராலும் அழிக்க முடியாது. எதிராளி தப்பித்தாலும் மண்டை ஓட்டுக் குறியைக் கொண்டு பின்னர் எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள் மக்கள். மாயாவிக்கு ஒரு மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் உண்டு. ஒவ்வொரு மாயாவியும் இறக்கும் போதும் தனது பொறுப்பைத் தனது மகனிடம் விட்டுச் செல்வது வழக்கம். இப்படித்தான் தலைமுறை தலைமுறையாக மாயாவியின் தோற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மாயாவியின் அதிரடியிலும், தீமையை எதிர்க்கும் சாகசத்தாலும் நான் அவருக்கு ரசிகனானேன்.

ஜேம்ஸ்பாண்ட் கதைகள் அப்படியே இப்போது வரும் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் போலத்தான். கொஞ்சம் சாகசம், குடி, கும்மாளம் என்று. கடைசியில் "007 உங்களாலதான் இதையெல்லாம் செய்யமுடியும்" என்ற வசனத்தோடு கதை முடியும்.

பின்னர் கொஞ்ச நாளில் ராணி காமிக்ஸ் பதிப்பு நிறுத்தப்பட்டது. பின் எங்கள் நூலகத்தில் லயன், முத்து காமிக்ஸ் வாங்க ஆரம்பித்தனர். மாயாவியை என் தலைவனாக நினைத்ததாலோ என்னவோ அந்த காமிக்ஸ் புத்தகங்களில் என் மனம் நிலைக்கவில்லை.

அப்புறம் எனக்கு அந்தக் காலகட்டத்தில் (1993-95) ஜூனியர் விகடன் மூலமாகத்தான் அரசியல் அறிமுகம் ஆனது. ஜெயலலிதாவும், அமைச்சர்களும் பண்ணும் அட்டகாசங்கள், வெளிப்படையான ஊழல்களை ஜூவியில் படிக்கும் போது ஒரு வெறியைக் கிளப்பியது. திமுக-தமாகாவை வெளிப்படையாகவே ஆதரித்து வீட்டில் பேசிய போது "இந்த வயசிலேயே என்ன அரசியல்?" என்று திட்டு விழுந்தது. இப்போ அந்த இதெல்லாம் ஒண்ணும் இல்லை. எல்லோரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைன்னு தெரிஞ்சு போச்சு. :)

இப்படி சின்னப்புள்ளையாத் திரிஞ்ச என்னைப் புதினங்கள் படிக்கத் தூண்டியவர் கல்கி. சரி போதும். இன்னொரு பதிவாப் போட்டுடலாமா?