Saturday, March 01, 2008

எழுத்தாளர் சுஜாதா - சில நினைவுகள்


சுஜாதா என்ற தமிழ் எழுத்துலகின் நட்சத்திரம் ஒன்று தன் ஒளியை நிறுத்திக் கொண்டுவிட்டது. வருத்தங்களும், சோகங்களும் நிரம்பிய முகங்களை தமிழ் வாசகர் வட்டத்தில் பார்க்கிறோம். இப்படிப்பட்ட மாமனிதரை நேரில் காணும் வாய்ப்பு ஒருமுறை சென்னையில் நான் பணிபுரியும் போது ஏற்பட்டது.

இரு வருடங்களுக்கு முன்பு சென்னையில் என் உடன் பணிபுரியும் நண்பனின் அண்ணனுக்குத் திருமணம். கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருக்கும் பாம்குரோவ் ஹோட்டலின் பின்புறம் உள்ள மண்டபத்தில்தான் திருமணம். அலுவலக நட்பு வட்டம் எல்லோரும் சென்றிருந்தோம். நாங்கள் போனது இரவு 7மணிக்கு மேல். எனவே உள்ளே போய் மணமக்களை வாழ்த்தி விட்டு சாப்பிடப் போகும் போது உடன் வந்திருந்த கேரளத்து டிம்சன் "கல்யாணத்துக்கு சுஜாதால்லாம் வந்திருக்கு"ன்னான். எங்க கிளையன்ட் ஒருத்தங்க பேரும் சுஜாதாதான். நாங்க பண்ற ப்ராஜட்க்கு யுஏடி எல்லாம் அவங்கதான் பண்ணுவாங்க. அதனால் நாங்க அவுங்கதான் வந்திருக்காங்க போல பொண்ணுக்கு சொந்தமா இருக்கும்னு நினைச்சிக்கிட்டோம்.

சாப்பிட்டு விட்டு வெளியே வந்தால் மண்டபத்துக்கு வெளியே சேர் போட்டு எழுத்தாளர் சுஜாதா யார் கூடவோ பேசிக் கொண்டிருந்தார். நான் தான் முதலில் கவனித்தேன். "டேய் சுஜாதாடா"ன்னு சொல்ல நண்பர்கள் எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். டிம்சன் "நான் தான் அப்பமே சொன்னனில்லை?"ன்னான். டக் இன் செய்த தொள தொள சட்டையுடன் எளிமையான தோற்றத்தில் உட்கார்ந்து ஒருவருடன் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தார். நாங்களும் அந்த இடத்தை விட்டுப் போக மனமில்லாமல் நாங்களும் அவருக்கு சற்று தள்ளி நாற்காலிகளில் அமர்ந்தோம்.

எனக்கு அவரிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டுமென்று மிகுந்த ஆவல். ஆனால் கையில் பேப்பரோ, பேனாவோ இல்லை. சாப்ட்வேர் இன்ஜினியர்கள் அல்லவா? ரொம்பவே வருத்தமாகப் போய்விட்டது. அவரும் எங்களை அடிக்கடி கூர்ந்து கவனித்தார். நான் "அவரிடம் எதாவது பேசுவோம்" என்று சொன்னேன். எல்லோருக்கும் கூச்சம். என்ன பேசுவது என்று. யாரும் வரவில்லை. வேறுவழியின்றி நானும் விட்டுவிட்டேன். ஒருமணிநேரத்துக்கு மேல் அங்கே இருந்தோம். நாங்கள் கிளம்பிய போது மணி 9:30. நாங்கள் கிளம்பும் வரை சுஜாதா கிளம்பவில்லை. இப்பொழுது ஒரு நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிட்டோமே என்று தோன்றுகிறது.

போனவாரம் மதுரையிலிருந்து கிளம்பும் போது கொஞ்சம் நேரம் இருந்ததால் ரயில் நிலையம் பக்கத்தில் இருக்கும் சர்வோதய இலக்கியப் பண்ணைக்குச் சென்று சுஜாதா புத்தகங்களைத் தேடினேன். ஸ்ரீரங்கத்துக் கதைகளில் இரண்டு பக்கம் படித்து விட்டு "தள்ளுபடி ஏதும் இருக்கா?"ன்னு கேட்க அப்படியெல்லாம் ஏதும் இல்லை என்று சொன்னார்கள். எனவே நண்பனிடம் சொல்லி செல்வியில் தள்ளுபடியுடன் வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டே வந்துவிட்டேன்.

பின்னர் பொழுது போக்க கல்கி வாங்கிவிட்டு ரயிலில் வரும் போது படித்துக் கொண்டே வந்தேன். அதில் 'வாரம் ஒரு பாசுரம்' என்ற தொடரில் சுஜாதா எழுதிவருகிறார். அதைப் படிக்கும் போது சுஜாதா உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தேசிகனின் பதிவு நினைவுக்கு வந்தது. இந்த நிலையிலும் தவறாமல் எழுதி வருகிறாரே என்று நினைத்துக் கொண்டேன். அவரது கடைசிப் படைப்பைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்று தோணவில்லை.

சுஜாதாவின் படைப்புகளில் 'கரையெல்லாம் செண்பகப்பூ', 'கற்றதும் பெற்றதும்', 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' மட்டுமே படித்திருக்கிறேன். இருந்தாலும் அவர் மீது அப்படி ஒரு ஈர்ப்பு. இன்னமும் நிறையப் படிக்க வேண்டும் என்று ஆவல். என் அண்ணன் அவர் குமுதத்தில் எழுதிய அறிவியல் தொடரின் பக்கங்களையெல்லாம் சேகரித்து வைத்த ஞாபகம் இருக்கிறது. அவரின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டால் எல்லாத் தரப்பு மக்களையும் எளிதில் சென்று அடையும். சாத்தியமா என்று தெரியவில்லை.

அமரர் கல்கியைப் போல் அமரர் சுஜாதாவுக்கும் தமிழ்மக்களின் நெஞ்சில் என்றும் நீங்காத இடம் உண்டு. அந்த தமிழ்த்தாயின் அருந்தவப்புதல்வனின் ஆன்மா திருவரங்கனின் உள்ளத்துள் ஐக்கியமாக எல்லோரும் வேண்டுவோமாக!

5 comments:

தென்றல் said...

நல்லா சொல்லிருக்கீங்க!

அவருக்கு நமது அஞ்சலிகள்!

வல்லிசிம்ஹன் said...

இதுதான் நம்முடைய தயக்கத்துக்குக் காரணம்.
நம்மைவிடப் பெரியவர்களை அண்டுவதற்குத் தயக்கம்.
ஆனால் அவரிடம் பக்கம் போயிருந்தால் கட்டாயம் பேசி இருப்பார் பா.
வெகு அருமையாக எழுதி இருக்கிறீர்கள்

Yogi said...

வருகைக்கு நன்றி தென்றல்!

Yogi said...

வருகைக்கு நன்றி வல்லிசிம்ஹன் !

Anonymous said...

ஆமாம்.. ஒரு சகாப்தம் முடிவடைந்துவிட்டது!!!
இவரின் விஞ்ஞானக் கதைகளுக்கு நான் அடிமை