Wednesday, July 18, 2007

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 1

நான் இரண்டு வருடங்கள் Banking domain-ல வேலை பார்த்ததுனால ஓரளவுக்கு ஏடிஎம்,கடன்/வங்கிக் கணக்கு அட்டை, இணைய வியாபாரம்(?) (Online shopping) இதிலெல்லாம் கொஞ்சம் ஞானம் உண்டு. அவை பற்றித் தான் எழுதலாம்னு இருக்கேன். படிக்கிறவுங்க சும்மா போகாம, புரிஞ்சுதா இல்லையாங்கிறதையும், ரொம்ப Technical terms உபயோகிக்கிறேனாங்கிறதையும் கருத்தாகச் சொல்லிவிட்டுப் போங்கள்.சந்தேகங்கள் இருந்தாலும் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.

இப்போது ஏடிஎம் வசதியில்லாத வங்கியே இல்லைன்னு சொல்லலாம். நாம் ஒரு வங்கியில் கணக்கு ஆரம்பித்த உடனே அல்லது கடன் அட்டைக்கு விண்ணப்பித்த பிறகு நமக்கு ஒரு பிளாஸ்டிக் அட்டையை வழங்குவார்கள். அதைதான் நாம் ஏடிஎம் அல்லது கடையில் சாமான் வாங்கும் போது பணத்துக்குப் பதிலாக உபயோகிக்கிறோம். இது எல்லோருக்கும் தெரிஞ்சதுதான். (அப்புறம் எதுக்கு நீ வேற ஒரு தடவை சொல்றன்னு கேட்கக் கூடாது. அப்பத்தான ஒரு flow கிடைக்கும்). அந்த அட்டையில் அப்படி என்ன இருக்குன்னு தெரிந்து கொள்வோம்.

அந்த அட்டையில் உங்கள் அழகான முகம், அட்டை எண், காலாவதியாகும் தேதி போக பின்னால் ஒரு கருப்புப் பட்டையிருக்கும். அதன் பேர் Magnetic Stripe. பிளாப்பியில் இருக்கிறதல்லவா அதேதான். தண்ணீரில் போட்டால் கூட ஒன்றும் ஆகாது(போட்டுப் பார்த்துட்டு ஒப்பேந்து போச்சுன்னா நான் பொறுப்பில்லை). அந்தக் கருப்புப் பட்டையிலும் நமது கார்டு எண், காலாவதியாகும் தேதி போக CVV1(Card Verification Value 1) என்ற ரகசிய எண்ணும் இருக்கும். இது ஒவ்வொரு கார்டுக்கும் வேறாக இருக்கும். உங்களுக்குக் கொடுப்பதற்காக அட்டை செய்யும் போதே அந்த ரகசிய எண்ணை அந்த கருப்புப் பட்டையில் பதிந்து விடுவார்கள்.இது எதற்காக என்றால் ஒருவருடைய அட்டை எண்ணும், காலாவதியாகும் தேதியும் தெரிந்துவிட்டால் வேறு யார் வேண்டுமானாலும் போலி அட்டை செய்து கொள்ளமுடியுமல்லவா? அதைத் தடுக்கத்தான்.

CVV1 என்று இருக்கிறதே CVV2 வேறு இருக்கிறதா என்றால் ஆமாம். உங்கள் அட்டையைத் திருப்பிப் பார்த்தால் கருப்புப் பட்டையின் கீழ் நீங்கள் கையெழுத்திடுவதற்காக வெள்ளை நிறத்தில் ஒரு பட்டையிருக்கும். அதில் கடன் அட்டை என்றால் உங்கள் அட்டை எண்ணும், வங்கிக் கணக்கு அட்டை என்றால் உங்கள் வங்கிக் கணக்கு எண்ணும் அதைத் தொடர்ந்து ஒரு 3 இலக்க எண்ணும் இருக்கும். அது தான் CVV2. இது எதுக்குன்னா இணையத்தில் உபயோகப்படுத்துகிற போது நம்மளோட அட்டைதானா இல்ல போலியான்னு கண்டுபிடிக்கிறதுக்காக. இதுவும் ஒவ்வொரு அட்டைக்கும் மாறுபடும். இது ஒவ்வொன்றின் பயன் பற்றியும் பின்னால் விபரமா சொல்கிறேன். இப்போ ஏடிஎம் பற்றிப் பார்க்கலாம்.

ஏடிஎம்ங்கிறது கொஞ்சம் ஹைடெக் அலமாரி. NCR, Diebold நிறுவனங்கள தான் இவைகளின் தயாரிப்புக்குப் புகழ் போனவை. ஏடிஎம் மிகவும் உறுதியானது. அதன் கண்ணாடியைக் கூட யாரும் எளிதில் உடைக்க முடியாது.அதற்குள் ஒரு கணினி இருக்கும். அது தான் நாம் பார்க்கும் screen எல்லாம் காட்டும். விசைப்பலகைக்குப் பதில் நாம் அமுக்கும் எண்கள் கொண்ட Key Pad இருக்கும். அப்புறம் ஒரு Card Reader. நாம ஒரு துவாரத்தில் நமது அட்டையை சொருகுகிறோமே அது தான். அது தான் நமது அட்டையின் பின்னால் இருக்கும் கருப்புப் பட்டையில் இருக்கும் விபரங்களைப் படித்து தற்காலிகமாகச் சேமித்து வைத்துக் கொள்ளும்.

அப்புறம் ஒரு பெட்டகம் (Locker). அதில் தான் பணம் வைக்கும் Slots இருக்கும். ஏடிஎம்மில் பணம் இல்லையென்றால் இந்த பெட்டகத்தைத் திறந்து ஒவ்வொரு Slotடிலும் 1000,500,100 என்று வைத்து எந்த ஸ்லாட்டில் எந்த ரூபாய் நோட்டுக்கள் இருக்கின்றன என்பதை ஏடிஎம்-மின் கணினியில் பதிந்து விடுவார்கள். மாற்றிப் பதிந்து விட்டால் சீன் தான். 500 எடுப்பவனுக்கு 1000மும், 1000 எடுப்பவனுக்கு 100ம் போகும். அதனால் இதை செய்யும் போது கவனமாக இருப்பார்கள். குறிப்பாக இந்தியாவில் தற்போதுள்ள ஏடிஎம் வகைகளில் கள்ள நோட்டுகளைக் கண்டுபிடிக்கும் வசதியும், எந்த ரூபாய் நோட்டு என்று அறிந்து கொள்ளும் வசதியும் கிடையாது. வெளிநாடுகளில் இருக்கலாம் என நினைக்கிறேன்.

மேலும் ரசீது கொடுக்கும் ஒரு ஸ்லாட்டும், ஏடிஎம்மில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக EJ (Electronic Journal) எனப்படும் காகித ரோலும் இருக்கும். இந்தக் காகித ரோலில நாம் ஏடிஎம்மில் பணம் எடுத்தாலோ, ஏடிஎம்மைத் திறந்தாலோ, நாம் என்ன செய்தாலும் அந்தக் காகித ரோலில் எழுதிக் கொண்டே வரும். காகிதம் தீர்ந்து போனால் கூட memoryயில் பதிந்து வைத்துக் கொண்டு காகித ரோலை மாட்டின உடனே 'ஒரு கடமை தவறாத காவல்துறை அதிகாரி' போல கட கட வென எழுதித் தள்ளிவிட்டு தான் மறுவேலை பார்க்கும். இது விமானங்களில் இருக்கும் கருப்புப் பெட்டி போல் பின்னால் என்ன பிரச்சினையென்றாலும் பார்த்துத் தெரிந்து கொள்ள உதவும்.

அப்புறம் ஒரு குப்பைத் தொட்டி. இது எதுக்குன்னா உங்களுக்கு ரசீது கொடுக்கும் போதோ, அல்லது பணம் கொடுக்கும் போதோ கிழிந்து அல்லது எசகு பிசகாக மாட்டி விட்டாலோ அதை அப்படியே உள்ளே இழுத்து இந்தக் குப்பைத் தொட்டியில் போட்டு விடும். இது போக பணம் கொடுக்கும் Cash dispenser, பணம் அல்லது செக் டெபாசிட் செய்ய உதவும் Slotகளும் இதில் உள்ளன.

ஆக இவ்வளவு சாமான் சட்டுகளும் ஒரு ஏடிஎம் பெட்டியில் உள்ளன. சரி அட்டையைப் போட்டவுடனே கொஞ்ச நேரத்தில் எப்படிப் பணம் வருது? அது அடுத்த பதிவில்.

(தொடரும்)

37 comments:

Udhayakumar said...

சூப்பர்!!!

Yogi said...

நன்றி உதயா !

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

பொன்வண்டு,
மிக்க மகிழ்ச்சி, நன்றாக ஆரம்பித்து இருக்கிறீர்கள. தொடர்ந்து எழுதுங்கள். நீங்கள் ஒவ்வொரு பகுதி வெளியிடும் போதும் எனக்கு ஒரு மின்னஞ்சல் தட்டுங்கள். நான் தொடர்ந்து வாசிக்கிறேன்.

Yogi said...

நன்றி பாரி அரசு.

Unknown said...

ஆரம்பமே அசத்தலா இருக்கு.. தொடருங்கள் பொன்வண்டு படிக்க் ஆவலாய் உள்ளேன்.

Yogi said...

வாங்க தேவ். பாராட்டுக்கு நன்றி.

Anonymous said...

You have started really informative article. Keen to know more info. Keep it up. - Guna

Yogi said...

நன்றி குணா ! .

யாத்ரீகன் said...

பொன்வண்டு, எளிமையாக சொல்லத்தொடங்கியிருகிரீர்கள்..... நம் அட்டையின் பின் உள்ள காந்த பகுதியை பிரதியெடுப்பது போல் யாரவதால் செய்ய முடியுமா ? அதாவது, நாம் ஒரு கடையில் வாங்குவதற்கு அட்டையை கொடுக்கும்போது இதை செய்ய முடியுமா ? ஏனென்றால் சில குற்றங்களின் பிண்ணணியில் இத்தகைய செயல் உள்ளதாக சொல்வார்கள், அது எவ்வளவு தூரம் உண்மை...

Anonymous said...

Its really informative article. I am interested to know more information.
தொடர்ந்து எழுதுங்கள். நீங்கள் ஒவ்வொரு பகுதி வெளியிடும் போதும் எனக்கு ஒரு மின்னஞ்சல் தட்டுங்கள். நான் தொடர்ந்து வாசிக்கிறேன்.

Yogi said...

// பொன்வண்டு, எளிமையாக சொல்லத்தொடங்கியிருகிரீர்கள்..... நம் அட்டையின் பின் உள்ள காந்த பகுதியை பிரதியெடுப்பது போல் யாரவதால் செய்ய முடியுமா ? அதாவது, நாம் ஒரு கடையில் வாங்குவதற்கு அட்டையை கொடுக்கும்போது இதை செய்ய முடியுமா ? ஏனென்றால் சில குற்றங்களின் பிண்ணணியில் இத்தகைய செயல் உள்ளதாக சொல்வார்கள், அது எவ்வளவு தூரம் உண்மை... //

யாத்திரீகன், பாராட்டுக்கு நன்றி.

கேடிக் கில்லாடிகள் அதையும் செய்கிறார்கள். ஆனால் மிகவும் கடினமே.

ஏனென்றால் கருப்புப் பட்டையில் Track1, Track2, Track3 என மூன்று இருக்கும். ஒவ்வொரு வங்கியும் அவரவர் வசதிக்கு ஒவ்வொன்றை உபயோகிப்பார்கள்.

உதாரணத்திற்கு, கடையில் சாமான் வாங்கிவிட்டு அட்டையைத் தேய்க்கிறார்களே அந்த இயந்திரத்தின் பெயர் EDC (Electronic Data Capture Machine). அதில் இருக்கும் Card Reader கொண்டு தகவல்களைப் பிரதியெடுக்க முடியும். ஆனால் அதெல்லாம் ரொம்ப கஷ்டம். ஏனென்றால் அட்டையில் இருக்கும் கருப்புப் பட்டடையில் என்ன format-டில் தகவல்கள் பதிவாகியிருக்கிரும் என்பதெல்லாம் வங்கிக்கும், அந்த EDC இயந்திரம் செய்கிறார்களே அவர்களுக்கும் தான் தெரியும். ஆகவே அந்தத் தகவல்கள் எல்லாம் அத்துப்படியாகத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.எனவே பயப்படத் தேவையில்லை.

Yogi said...

// Its really informative article. I am interested to know more information. //

பாராட்டுக்கு நன்றி காரைக்குடி கருப்பையா.

// தொடர்ந்து எழுதுங்கள். நீங்கள் ஒவ்வொரு பகுதி வெளியிடும் போதும் எனக்கு ஒரு மின்னஞ்சல் தட்டுங்கள். நான் தொடர்ந்து வாசிக்கிறேன். //

மின்னஞ்சல் முகவரியே இல்லையே.???. அப்புறம் எப்படி தகவல் அனுப்புவது ???

:)))))

Anonymous said...

இத! இத! இதத்தான் எதிர்பார்த்தேன்.
நல்ல பதிவு. தொடருங்கள். நன்றி.

Yogi said...

கருப்பையா ! மின்னஞ்சல் முகவரி வந்துருச்சு ...

முரளிகண்ணன் said...

தொடர்ந்து எழுதுங்க informative வா இருக்கு

Yogi said...

நன்றி Vathilai முரளி

வடுவூர் குமார் said...

மலேசியாவில் என்று நினைக்கிறேன்.. ஏடிம் இயந்திரத்தில் அந்த அட்டை போடும் துளைக்கு வாயிலில் ஏதோ ஒரு சின்ன ரீடரை பொருத்தி அட்டையின் விபரங்கள் மற்றும் கடவுச்சொல் பெற்றுக்கொண்டு ஏதோ விளையாடியதாக செய்தித்தாளில் வந்தது.
இப்படி முடியுமா?
எங்கள் இயந்திரத்தில் பல பயன் அட்டைகள் உபயோகப்படுத்த முடியும் என்பதால் கடன் பற்று அட்டையை மட்டும் அப்படி செய்ய முடியுமா?

Yogi said...

// மலேசியாவில் என்று நினைக்கிறேன்.. ஏடிம் இயந்திரத்தில் அந்த அட்டை போடும் துளைக்கு வாயிலில் ஏதோ ஒரு சின்ன ரீடரை பொருத்தி அட்டையின் விபரங்கள் மற்றும் கடவுச்சொல் பெற்றுக்கொண்டு ஏதோ விளையாடியதாக செய்தித்தாளில் வந்தது.
இப்படி முடியுமா? //

வாய்ப்புகள் உண்டு.

// எங்கள் இயந்திரத்தில் பல பயன் அட்டைகள் உபயோகப்படுத்த முடியும் என்பதால் கடன் பற்று அட்டையை மட்டும் அப்படி செய்ய முடியுமா? //

தங்கள் கேள்வி புரியவில்லை.

Deepa said...

ரொம்பவும் அருமையா புரியும் படியா சொல்லியிருக்கீங்க.. very informaton and "must know" பதிவு..
வாழ்த்துக்கள்

Yogi said...

வாங்க 'டெக்' தீபா அக்கா!

பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி.

:)))

வவ்வால் said...

எளிமையாகவும் ,அருமையாகவும் உள்ளது ,தொடருங்கள்.

நீங்கள் சொல்வது போல நகல் தயாரிப்பது ஒன்றும் கடினம் அல்ல, ரீடர் மற்றும் கணிணி இரண்டும் வைத்துக்கொண்டு அப்படியே பிரதி தயாரிக்கிறார்கள். சென்னையில் அடிக்கடி இப்படி பயன்படுத்தி மாட்டுகிறார்கள் அவர்கள் அந்த போலி கார்டை மலேசியா , அல்லது சிங்கப்பூரில் தயாரித்து வாங்கியதாகவே சொல்கிறார்கள்.

வசதியானவர்கள் யார் எனதெரிந்து கொண்டு அவர்களது கார்டையே நகல் எடுக்கிரார்கள் அதற்கு தான் வங்கி அலுவலர்களும் உடந்தையாக இருக்கிறார்கள்.யார் அக்கவுன்டில் அதிக பணம் இருக்கிறதுனு தெரியனும்ல பணம் இல்லாதவங்க கார்டுக்கு போலி போட்டா என்ன பயன்!

நிறைய மோசடி நடந்தாலும் வங்கி புகார் கொடுக்காது பெயர் கெட்டு விடும் என்று. பெரும்பாலும் சத்தம் போடாமல் செட்டில் செய்து விடுகிறார்கள். சில சமயம் மட்டுமே புகார் போலீஸ் வரை செல்கிறது.

Yogi said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வவ்வால் ! .

Yogi said...

வவ்வால், நீங்க சொல்றது மிகவும் சரி. வெளி நாட்டில் சுலபமாக டெக்னாலஜியைக் கற்றுக் கொண்டு இந்த சட்டத்துக்குப் புறம்பான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். ஏதோ நம்ம நாட்டில் அந்த அளவுக்கு இல்லைன்னு நினைத்துக் கொள்ளலாம்.

Yogi said...

asrajesh said...

Excellent initiative .. Great.. Thank you very much for this useful information... Keep going.. keep me informed whenever you are updating next part.

Yogi said...

நன்றி ராஜேஷ் ! உங்கள் பின்னூட்டத்தில் மின்னஞ்சல் முகவரி இருந்ததால் மட்டுறுத்தல் செய்திருக்கிறேன்.

Yogi said...

// இத! இத! இதத்தான் எதிர்பார்த்தேன்.
நல்ல பதிவு. தொடருங்கள். நன்றி. //

வெயிலான், உங்க பின்னூட்டம் எப்படியோ மிஸ்ஸாயிருச்சு. இப்பத் தான் பார்த்தேன்.

பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி.

Anonymous said...

முதலில் தென்றலின் (நாணயம்2007) குளுமை; இப்போது பொன்வண்டின் ரீங்காரமும் சேர்ந்துக்கொண்டது. எண்ணற்ற பயனாளிகளில் நானும் ஒருவன்.உணர்வுகளால் வெளிப்படும் நன்றியை வார்த்தைகளால் சொல்ல்லிவிட முடியாதென்பதால், இவை எனக்குக் கிடைக்கக் காரணமாயிருக்கும் நம் தமிழ்மைக்கு நன்றி சொல்லிவிடுகிறேன்.
ஜகன்
தோஹா, கத்தார்.

Nakkiran said...

Waiting for next part...

துளசி கோபால் said...

என்ன 'ஏடிஎம்'முன்னு கொஞ்சம் அசிரத்தையாத்தான் வந்தேன்.
ஆனா அட்டகாசமா இருக்கு சொல்லி இருக்கும்விதம்.

அருமை.

வாழ்த்து(க்)கள்.

பாலராஜன்கீதா said...

எங்கள் இல்லத்தில் ATM (any time money)க்கு இன்னொரு பெயர் அப்பா.
:-))

Yogi said...

பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி ஜகன் ! .

Yogi said...

வருகைக்கு நன்றி நக்கீரன்.

Yogi said...

பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி துளசியக்கா .

Yogi said...

வருகைக்கு நன்றி பாலராஜன்கீதா.

// எங்கள் இல்லத்தில் ATM (any time money)க்கு இன்னொரு பெயர் அப்பா.
:-)) //

எல்லோர் வீட்டிலும் தான். :))

Anonymous said...

super!.........

Yogi said...

நன்றி அனானி !

துரை.வேலுமணி said...

எதிபாராமல் உங்கள் வலைப்பதிவை காண நேர்ந்தது. சிறப்பு. வாழ்த்துக்கள்.