Thursday, July 12, 2007

கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருக்காது

சிறுவயதில் எனக்கு மரம், செடி வளர்த்தல் என்றால் மிகவும் விருப்பம். ஆனால் நாங்கள் சொந்த ஊரில் இருந்தபோது எங்கள் வீட்டில் அதற்கான இடம் கிடையாது. ஆனாலும் காலியான பாலித்தீன் பைகளில் மண் நிரப்பி காட்டுரோஜா(இப்போ பட்டுரோஸ்?!)ச் செடிகளை வளர்த்து வந்தேன். இசை கேட்டால் செடி நன்றாக வளரும் என்பதால் எங்கள் வீட்டு வானொலி இருக்குமிடத்துக்கு அருகில் சன்னலுக்கு வெளியே வைத்து வளர்த்து வந்தேன். ஆனாலும் மரம் வளர்ப்பது என்பது ஓரு கனவாகவே இருந்து வந்தது.

பின்னர் வேறொரு வீட்டிற்கு மாறியபோதும் இதே நிலைதான் என்றாலும், வீட்டிற்கு முன்புறம் நிறைய காலி இடமிருந்ததால் மரம் வளர்க்கும் ஆசை மீண்டும் முளைத்தது. வீட்டு வாசலுக்கு அருகில் ஒரு மரம் வளர்க்கப் போகிறேன் என அம்மாவிடம் சொல்லி வைத்தேன். "என்ன மரம்டா?"ன்னு கேட்டபோது "வேப்பமரம்" என்றேன். மறுநாள் காலையில் என் அம்மா இடுப்பில் தண்ணீர்க் குடமும், கையில் சிறிய வேப்பங்கன்றையும் வைத்திருந்தார்கள். தண்ணீர் பிடிக்கும் குழாயடியில் இருந்து எடுத்து வந்ததாகச் சொன்னார்கள். இரண்டு இலைகள் மட்டுமே முளைத்திருந்த சிறிய செடி அது.

பின்னர் ஒரு காலி பாலித்தின் பையில் மண் நிரப்பி அதில் ஊன்றி வீட்டின் பின்புறம் வெயில் படும் இடத்தில் வைத்து வளர்த்து வந்தேன். ஒரு மரம் மட்டும் போதுமா? இன்னொன்றும் வளர்ப்போம் என எண்ணி பள்ளியில் எனக்கு மிகவும் பிடித்த மரமான மயில் கொன்றை மரத்தின் விதைகளை சேகரித்துக் கொண்டு வந்து முளைக்கவைத்தேன். தினமும் தண்ணீர் ஊற்றியும் வேப்பமரம் மட்டுமே வளர்ந்தது. மயில் கொன்றை முளைக்கவே இல்லை. பின் விதையைத் திரும்ப எடுத்து தண்ணீரில் மூன்று நாட்கள் ஊற வைத்த பின் அது லேசாக முளைக்கத் தொடங்கியதும் திரும்பவும் பையில் வைத்து வளர்த்து வந்தேன்.

சில நாட்களில் இரண்டும் நன்கு பெரியனவாக வளர்ந்து விட்டன. தரையில் ஊன்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது. எங்கள் வீட்டு வாசலில் ஒரு மரம் மட்டுமே வைக்க இடமிருந்ததால் வேப்பமரத்தை மட்டும் வீட்டு வாசலில் வைப்பது என்றும் மயில் கொன்றை மரத்தை எங்கள் வீட்டு எதிரில் இருந்த மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து வளர்ப்பது என்றும் முடிவு செய்தோம். அதன்படியே மரக்கன்றுகளுக்கு வேலியெல்லாம் போட்டு தினமும் தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து வந்தேன். இரண்டு வருடங்களில் மிகவும் நன்றாகவே வளர்ந்து விட்டன.

பின்னர் அந்த ஊரிலிருந்து இராமநாதபுரத்திற்கு மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது எனது நண்பர்கள், தெரிந்தவர்கள், ஆசையாய் வளர்த்த மரங்கள் என எல்லோரையும் பிரிய வேண்டியதாயிற்று. கிளம்பும் முன் வீட்டு வாசலில் இருந்த வேப்பமரத்தையும், மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்று மயில் கொன்றை மரத்தையும் நன்றாக ஒருமுறை பார்த்துவிட்டு வந்தேன்.
பின்னர் இராமநாதபுரத்தில் தற்காலிகமாக ஒரு வீட்டில் தங்கியிருந்தோம். நான் மதுரையில் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தேன். பிறகு வேறொரு வீடு பார்த்திருப்பதாகவும் வீடு நன்றாக இருப்பதாகவும், அங்கு ஒரு ஆச்சரியம் எனக்காக இருப்பதாகவும் என் அம்மா தொலைபேசியில் சொன்னார்கள். நான் எனது நண்பர்கள் யாராவது பக்கத்து வீட்டில் இருக்கிறார்களா என்று கேட்டதற்கு நீ வந்து நேரடியாகப் பார் என்று சொல்லிவிட்டார்கள். நானும் என்னடா இது என்னவாக இருக்கும் என எண்ணியபடியே அந்த வாரம் ஊருக்கு வந்தபின் புது வீட்டைப் பார்க்கக் கிளம்பினேன்.

உண்மையிலேயே ஆச்சரியம் தான். அந்த வீட்டின் வாசலில் ஒருபுறம் வேப்பமரமும், மறுபுறம் மயில்கொன்றை மரமும் இருந்தன. கிட்டத்தட்ட நான் எங்கள் சொந்த ஊரில் வளர்த்த மரங்களின் அளவிலேயே இருந்தன. அம்மா "பார்த்தாயா! இது தான் நான் சொன்ன ஆச்சரியம்"ன்னார்கள். "என்னால் நம்பவே முடியவில்லை" என்றேன். "நீ கஷ்டப்பட்டு இரு மரங்களை வளர்த்தாய். அதன் பலன் உனக்குச் சேரவேண்டியது. அது நீ எங்கிருந்தாலும் உனக்குக் கிடைக்கும் "
ன்னு அம்மா சொன்னார்கள். இன்றும் அந்த மரங்கள் என்னதான் வெயில் அடித்தாலும் வீட்டுக்குள் குளுமையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இப்போதும் எங்கள் சொந்த ஊருக்குச் சென்றால் எனது மரங்களைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வருவது வழக்கம்.

3 comments:

வல்லிசிம்ஹன் said...

இத்தனை பிரியமாய் வளர்த்தவரைத் தேடி வந்து விட்டதா மரங்கள்.....அருமை பொற்கொடி.

வல்லிசிம்ஹன் said...

பொன்வண்டு என்று எழுதவதற்கு பொற்கொடி என்று எழுதிவிட்டேன். மன்னிக்கணும் பொன்வண்டு.

Yogi said...

// பொன்வண்டு என்று எழுதவதற்கு பொற்கொடி என்று எழுதிவிட்டேன். மன்னிக்கணும் பொன்வண்டு. //

பரவாயில்லைங்க :)