Thursday, January 27, 2011

தமிழக மீனவர்கள் கொலை - புறக்கணிப்போம் இலங்கையை !!


ஒருவரா இருவரா? இதுவரை 400 க்கு மேற்பட்ட மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டு விட்டார்கள். முதலில் விடுதலைப்புலிகள் என்று நினைத்து சுட்டோம் என்றார்கள். இப்போது போர் முடிந்து விட்ட நிலையில் மீண்டும் தாக்குதல்கள் நிகழ்ந்தால் இது தமிழர்கள் மீதான காழ்ப்புணர்வே தவிர வேறென்ன?

கையாலாகத மாநில அரசையும், வேண்டுமென்றே கள்ளத்தனமாக மவுனமாக இருக்கும் மத்திய அரசையும் இனியும் மீனவர்களும், நாமும் நம்பியிருக்க வேண்டுமா?

எங்கள் ஈழச்சகோதரர்களை எல்லாம் அழித்தாகிவிட்டது. இன்னும் ரத்தவெறி கொண்டு திரியும் இலங்கைக்கு வேறு வகையில் ஆப்படிக்க வேண்டும். உலகநாடுகள் பொருளாதாரத் தடை விதிக்காவிட்டால் என்ன? நாம் தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் இலங்கைக்கு எந்தவிதத்திலும் மறைமுகமாக உதவமாட்டோம் என உறுதி கொள்ள வேண்டும்.

பின்வரும் எல்லாம் நம்மால் நிச்சயம் செய்ய முடியும் செயல்கள் தான்.

1. சுற்றுலாவிற்கு இலங்கையைப் புறக்கணிப்பது. உலகத் தமிழர்கள் யாரும் இலங்கைக்குச் சுற்றுலா செல்லாமல் புறக்கணிக்க வேண்டும். தன் பொருளாதாரத்தில் பெரும் பங்கு சுற்றுலா வருவாயை நம்பியிருக்கும் இலங்கைக்கு இது நிச்சயம் பேரிழப்பு.

2. இலங்கையின் 'ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமான சேவையைப் புறக்கணித்தல். மிக முக்கிய நிமித்தமாகச் செல்ல நேர்ந்தாலும் பிற விமானசேவை நிறுவனங்களை உபயோகித்தல்.

3. இலங்கை வங்கியைப் புறக்கணித்தல். சென்னையில் இருக்கும் இலங்கை வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகள வேறு வங்கிகளுக்கு மாற்றுதல்.

4. சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் இருக்கும் 'ஶ்ரீலங்கன் ட்ரேட் சென்டர்' வணிக நிறுவனத்தைப் புறக்கணித்தல்.

5. இலங்கையிலிருந்து வரும் சிங்கள மாணவர்களுக்கு தங்குவதற்கு வீடுகள் தராமல் புறக்கணித்தல்.

6. விரைவில் தூத்துக்குடியிலிருந்து கொழும்பிற்குத் துவங்க இருக்கும் பயணிகள் கப்பல் சேவையைப் பயன்படுத்தாமல் இருத்தல். இது நாம் ஈழ, தமிழகத் தமிழர்களை வெறுக்கும் காங்கிரஸுக்கு வைக்கும் வேட்டு.

7. எந்த ஒரு இலங்கைத் தயாரிப்பையும் பயன்படுத்தாதிருத்தல்.

தமிழனமே ! ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது வெட்கமில்லாமல் காங்கிரசைத் தேர்ந்தெடுத்தோம்! இப்போது நம் தமிழகத் தமிழர்கள் கொல்லப்படும் போதாவது சொரணையுடன் இருப்போம் !!

வாக்களித்தபின் உறுதிச்சீட்டு - தேவையில்லாத முறை


இந்தியத் தேர்தல் ஆணையம் வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு புதிய முறையைக் கொண்டு வருவதாகச் சொல்லியிருக்கிறது.

நம் வாக்கு யாருக்கு இயந்திரத்தில் பதிவானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நாம் வாக்களித்தபின் ஒரு சீட்டினில் அச்சிட்டு வெளியிடும் முறையை ஆய்வு செய்து வருவதாகச் சொல்லியிருக்கிறது.

ஏற்கனவே வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்யமுடியும் என்ற பிரச்சினை உள்ள நிலையில் நம் வாக்கு யாருக்குப் பதிவாகிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்தால் அது நல்லதுதான்.

ஆனால் இதில் இன்னொரு முக்கியமான மறுபக்கமும் உள்ளது. இப்பொழுது எல்லாம் தங்கள் கட்சிக்கு வாக்களிப்பதற்கு கிராமங்களில் ஒரு வாக்கிற்கு ஆயிரக்கணக்கில் பணம் தரப்படுகிறது.

எனவே காசு கொடுத்த கட்சியினர் வாக்களித்தபின் இந்தச் சீட்டை வாங்கிப் பார்த்து தங்கள் கட்சிக்குத் தான் வாக்களித்திருக்கிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். காசு வாங்கிவிட்டு மாற்றுக் கட்சிக்கு வாக்களித்திருந்தால் 'டின்' கட்டிவிடுவார்கள். தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகும்.

வாக்காளர்களும் பலகட்சிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு 'உங்களுக்குத் தான் போட்டேன்.. உங்களுக்குத் தான் போட்டேன்..' என்று ஏமாற்றவும் முடியாது :).

எனவே முதலில் எந்தக் கட்சி காசு தருகிறதோ - குறைவாக இருந்தாலும் - வாங்கிவிட்டால் அவர்களுக்கு ஓட்டு போட்டே ஆகவேண்டிய நிலை உருவாகும். 'ஏன் மாமு அவசரப்பட்ட ... ரெண்டு நாள் பொருத்திருந்தா இந்தக் கட்சி இரண்டு மடங்கு காசு கொடுத்திருப்பான்ல..' என்று அதிகம் காசு வாங்கியவர்கள் வெறுப்பேற்றுவார்கள். :)

குடும்பத்தில் கணவர் அரசு ஊழியர். திமுக ஆதரவாளராக இருப்பார். அவர் மனைவி எம்ஜிஆர் விசுவாசியாக அதிமுகவிற்கு ஓட்டுப் போட்டிருந்தாலும், கணவரிடம் 'கலர் டிவி தந்த கருணாநிதிக்குத் தான் போட்டேன்' என்று புருடா விட்டிருப்பார். கணவரின் கைக்கு இந்தச் சீட்டு கிடைத்தால் வீட்டிற்குள் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் நடக்கும்.

நம் அளிக்கும் வாக்கு நமக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டிய ரகசியமான ஒன்று. அதை அடுத்தவரும் பார்க்கும் வகையில் அச்சிட்டுத் தரத் தேவையில்லை. காசு வாங்கிய யாரும் தங்களை ஏமாற்ற முடியாது என்ற நிலை உருவாகும் என்பதால் தான் அரசியல் கட்சிகள் எதுவும் இந்த முறையை எதிர்க்கவில்லை. மின்னணு வாக்குமுறையையே எதிர்த்தவர்கள் இப்போது மட்டும் வாய் மூடி இருப்பது ஏன்?

எனவே தேர்தல் ஆணையம் வேறு முறையை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.

Wednesday, January 26, 2011

WI5 - பட்டையைக் கிளப்பும் இணைய இணைப்பு சேவை !!



இப்பொழுது தான் புதிதாக மடிக்கணினி வாங்கியிருக்கிறேன். இணைய இணைப்பிற்காக கணினி வாங்குவதற்கு முன்பிருந்தே விசாரித்துக் கொண்டிருந்தேன். பெரும்பாலான இணையசேவை வழங்கும் நிறுவனங்கள் ரிலையன்ஸ், பிஎஸ்என்எல், டாடா போட்டான், எம்டிஎஸ் எம்பிளேஸ் ஆகியவை டேடா கார்டு 1500 முதல் 2500 வரை சொல்கிறார்கள். அதன்பிறகு மாதாமாதம் 750 ரூபாய் 516kbps வேகத்தில் சேவை அளிப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஆனால் இவ்வளவு காசு கொடுத்து நமக்குக் கட்டுபடியாகாது என்பதால், என்ன செய்யலாம் என யோசித்த போது, என் அறையின் கதவில் ஒரு விளம்பரத்தாள் சொருகப்பட்டிருந்தது. அதில் WI5 என்ற நிறுவனம் இணையவசதி செய்து தருவதாக குறிப்பிட்டிருந்ததால் அவர்களுக்குத் தொலைபேசினேன். அடுத்த ஒருமணி நேரத்தில் இணைய இணைப்பு கொடுத்துவிட்டார்கள்.

அதே போல மாதக்கட்டணமும் மிகவும் குறைவு. ரூ.250 முதல் பிளான்கள் உள்ளன. நான் ரூ250 திட்டத்தில் சேர்ந்துள்ளேன். முக்கியமான விசயம் இணைப்பு கொடுப்பதற்கான கட்டணம் (Installation charges) எதுவும் இல்லை. 256kbps 2GB தரவிறக்க அளவு. 30 நாள் அல்லது 2GB தரவிறக்கம். எது முதலில் முடிகிறதோ அப்பொழுது திரும்பவும் கணக்கைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இது ஒரு ப்ரீபெய்டு சேவை. மாதாமாதம் 30ம் தேதி பணம் கட்டுவதற்குப் பதில் 1ம் தேதி பணம் கட்டி அந்த மாதம் முழுவதும் உபயோகித்துக் கொள்ளலாம். நான் உபயோகித்தவகையில் மிகவும் நன்றாகவே உள்ளது.

இன்றைய தேதியில் WI5 மட்டுமே இவ்வளவு குறைந்த கட்டணத்தில் சேவை அளிக்கிறது.

எனவே இணைய இணைப்பு வேண்டியிருந்தாலோ, அல்லது மாற்ற நினைத்தாலோ தாரளமாக WI5க்கு மாறுங்கள்.

http://www.wi5.in/

Monday, January 24, 2011

பெங்களூரில் நாய்த் தொல்லை


கடந்த வாரம் பெங்களூரில் 2 வயது சிறுவனை நாய்கள் கடித்துக் குதறிக் கொன்ற சம்பவம் ரொம்பவே மனதைப் பாதித்தது. எவ்வளவு நாள் தான் பொறுப்பது இந்த நாய்ப் பிரச்சினைக்கு. அதுவும் பெங்களூரில் ரொம்பவே ஓவர். பெங்களூரின் நாய்கள் பற்றித் தெரியாதவர்களுக்கு அவற்றைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம். இங்கே இருக்கும் நாய்கள் நம்ம ஊர்த் தெருநாய்கள் மாதிரி சோப்ளாங்கி நாய்கள் அல்ல. நன்றாக கொழுக் மொழுக் என்று செர்லாக் பேபி மாதிரி இருக்கும் மலை நாய்கள் வகையைச் சேர்ந்தவை. பயம் என்பது அறவே கிடையாது. சாதாரணமாக நம் ஊரில் நாய்களை கையை ஓங்கி விரட்டினால் பயப்படுவது மாதிரி நடிக்கவாவது செய்யும். இங்கு அப்படி செய்தால் நம்மைப் பார்த்து முறைக்கும். கல்லெடுத்து அடிக்கப் போனால் குலைத்துக் கொண்டு கடிக்க வந்துவிடும்.

இந்திய அரசியல் சட்டப்படி விலங்குகளுக்கு துன்பம் செய்தல் கூடாது என்பது குறித்து ஒரு தனிப் பிரிவே உள்ளதாம். இங்கு நாய்களைக் கொல்லக்கூடாது ஆனால் கட்டுப்படுத்தலாம் என்ற வகையில் பெங்களூர் மாநகராட்சியிலும் சிலவற்றைப் பின்பற்றுகிறார்கள். அதாவது நாயைக் கஷ்டப்பட்டுப் பிடித்து அதற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து விட்டுவிடுவார்கள். ரேபிஸ் தடுப்புஊசி எல்லாம் போடுவார்கள். எதற்கு என்றால் கடித்தால் ரேபிஸ் பரவாமல் இருக்க. ஆனால் குழந்தைகள் கடியின் கொடூரம் தாங்காமல் இறந்துவிடுகிறார்கள். ஆக இந்த முறைகள் எல்லாம் வேலைக்கே ஆகாது. ஒரே வழி பாரபட்சம் இல்லாமல் அவற்றைக் கொல்வதே.

கருத்தடை அறுவை சிகிச்சை செய்தால் பிறகு ஏன் நாய்களின் எண்ணிக்கை வருடாவருடம் கூடுகிறது? ஆண்டவனுக்கே வெளிச்சம். பெங்களுரில் நாய்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு கிட்டத்தட்ட கூவம் அளவுக்கு ஓடும் சாக்கடைகளும், தெருவுக்கு நாலு இருக்கும் பேக்கரிகளும் அனுமதியின்றிப் பெருத்துவிட்ட கசாப்புக் கடைகளும் ஒரு காரணம். ஏற்கனவே பல குழந்தைகளைப் பெங்களூரின் நாய்கள் கடித்துக் கொலை செய்தது நமக்குத் தெரியும். இந்தப் பிரச்சினைக்கு முழுக்காரணமும் நீலச்சிலுவைச் சங்கத்தினரே. நாயைக் கொல்லக்கூடாது என்று கூப்பாடு போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி ஒருநாள் மட்டும் நாய்களுக்கு முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்து தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் போஸ் கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார்கள்.

எங்கள் ஊரில் மார்கழி மாதம் நாய்களை சுருக்கு போட்டுப் பிடித்து கழுத்தில் விஷஊசி போட்டுக் கொல்வார்கள். யாரும் அங்கே எதிர்ப்பது இல்லை. ஏனென்றால் நீலச்சிலுவை சங்கம் போன்ற வெட்டி அமைப்புகள் அங்கே இல்லை. நகரத்தின் பணக்காரர்களான நாய்க்காதலர்கள் இது போன்ற அமைப்புகளில் இருந்து கொண்டு கோசம் போட்டு போஸ் கொடுத்து விட்டு சென்று விடுகிறார்கள். அவர்கள் குழந்தைகள் எல்லாம் கணினியில் மட்டுமே விளையாடும். சாமானியர்களின் குழந்தைகள் அல்லவா தெருவில் விளையாடும்? பிறகு எப்படி அவர்களுக்கு இது பற்றிப் புரியும்?

இந்த நாய்களிடம் இருந்து தப்பித்த அனுபவம் எனக்கும் உண்டு. ஒருமுறை அதிகாலை 4 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. பிரதான சாலையில் அலுவலக வண்டியை நிற்கச் சொல்லிவிட்டு சந்து பொந்துகளின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தேன். சொன்னால் நம்பமாட்டீர்கள் ஒரு திருப்பத்தில் சுமார் முப்பது நாய்கள் இருக்கும். ஆட்டு மந்தை போல நின்று சண்டை போட்டுக் கொண்டிருந்தன. அதிர்ச்சியில் பின்வாங்கி பின் வண்டி ஓட்டுனருக்கு தொலைபேசி என் வீட்டின் அருகே வரச் சொல்லிப் பின் அலுவலகம் சென்றேன்.

நீலச்சிலுவைச் சங்கத்தினர் நாய்களைக் கொல்ல வேண்டாம் என்றால் அவற்றைத் தனியிடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும். விலங்குகளுக்கு சரணாலயம் மாதிரி. ஏற்கனவே கோரமங்களாவில் தெருவில் திரியும் பசு மற்றும் பிச்சை எடுக்கப் பயன்படுத்தப்படும் ஒட்டகங்கள், குதிரைகள் ஆகியவற்றைப் பராமரிக்க ஒரு காப்பகம் உண்டு. அது போல இவர்களும் செய்யலாம்.

அதை விடுத்து நாயைக் கொல்லாதே அது தெருவில்தான் திரியும் என்று சொல்வதும், கார் ஓட்டினால் விபத்தே நடப்பது இல்லையா? அதற்காக யாருமே கார் ஓட்டுவதில்லையா? அது போலத்தான் நாய்க்கடிக்கொலைகளும் சாதாரணம் என்று அபத்தமாக ஒப்பிட்டுப் பேசுவதும் தேவையில்லாதது. நான் ஒன்றும் நாய்களைப் பிடிக்காதவனோ வெறுப்பவனோ அல்ல. நானும் தெருநாய்களுக்கு சோறு போட்டு வளர்த்தவன்தான்.

உதாரணமாக நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக கிருஷ்ணகிரி-கன்னியாகுமரி சாலையில் இருக்கும் அனைத்து மரங்களும் வெட்டப்பட்டன. எதற்காக? மக்களின் வசதிக்காக. அதுபோலத்தான் இதுவும். மக்களுக்குச் சிரமம் தந்தால் நாய்களைக் கொல்வதில் என்ன தவறு?

குன்னூரில் இதே போன்று ஒரு சிறுவனை நாய்கள் கடித்துக் குதறிப்போட அவனது முகமே விகாரமாகி இப்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொஞ்சம் சரிசெய்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு மக்கள் போராட்டம் நடத்திய பிறகும் நாய்களைக் கொல்ல நீலச்சிலுவைச்சங்கம் அனுமதிக்கவில்லை. ஆனால் மக்கள் வித்தியாசமாக ஒரு யோசனை செய்து அவர்களின் மூக்கை உடைத்தார்கள். அதாவது ஆட்டுக் குடலை துண்டு துண்டாக வெட்டி அதனுள் விசத்தை வைத்து தெருக்களில் போட்டு விட்டார்கள். அதைத் தின்ற நாய்கள் செத்து ஒழிந்தன. நீலச்சிலுவைச் சங்கத்தினரின் முகத்தில் ஈயாடவில்லை.

இனியும் இவர்கள் தொல்லை தொடர்ந்தால் குன்னூர் மக்களை நாமும் பின்பற்ற வேண்டியதுதான். அல்லது 'ரக்த ஜ்வால ..' எனத் தொடங்கும் பைரவர் ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டு தெருவில் நடமாடவேண்டியது தான்.

Sunday, May 09, 2010

ராஜன் புரோட்டா ஸ்டால்



ஊரில் உத்தமராஜன் என்றால் எல்லோருக்கும் தெரியும். காரணம் அவர் கட்சியில் இருந்தார். அரசியல் என்றால் என்னவென்று தெரியுமுன்பே உத்தமராஜனையும் அவரது கட்சிப்பற்றையும் பார்த்து அரசியல் அரிச்சுவடி கற்றுக் கொண்டோம் என்றால் அது பொய்யில்லை.

உத்தமராஜன் என் வகுப்புத்தோழன் காந்திராஜனின் தந்தை. பிறக்கும் போதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியைக் கையில் பிடித்தபடியே வந்திருப்பாரோ என்று கூட நினைக்கத் தோன்றும். அப்படி ஒரு விசுவாசமான திமுக தொண்டர். வாட்டசாட்டமான உருவம். முறுக்கு மீசை. விரலில் கலைஞர் படம் போட்ட தடிமனான மோதிரம். தேய்த்த வெள்ளை வேட்டி சட்டை. வேட்டியில் கறுப்பு சிவப்பு கரை. அவரது ட்ரேட்மார்க் அடையாளம் ஒரு மிதிவண்டி. வண்டியின் ஹெட்லைட்டில் மஞ்சள் கலர் ஸ்கார்ப். இரண்டு ரிவர்வியூ கண்ணாடிகள். சக்கரத்தின் கம்பிகளில் கறுப்பு சிவப்பு மணிகள். சைக்கிளின் பின்புறம் சிவப்பு விளக்கின் மேலே உதயசூரியனின் படம். மிதிவண்டியின் கைபிடியின் இரண்டுபுறமும் ஒலிநாடாவைக் கொத்தாக வெட்டி காற்றடித்தால் சரசரவென சத்தத்துடன் செல்லுமாறு செய்திருந்தார். மிதிவண்டியின் செயின் கார்டில் 'ராஜன் புரோட்டா ஸ்டால்' என்று கறுப்பு சிவப்பு மையினால் எழுதப்பட்டிருக்கும்.

நாங்கள் எல்லோரும் ஒரே தெருதான். நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். தெருவில் விளையாடும் போது தண்ணீர் தவித்து காந்தியின் வீட்டுக்குப் போக நேர்ந்தால் வீட்டின் நடுப்பத்தியில் மாட்டப்பட்டிருக்கும் பெரிய பெரிய கலைஞர் படங்கள் ஒரு வித்தியாமான உணர்வை ஏற்படுத்தும். ராஜன் ஒன்றும் கட்சியின் பொறுப்புகள் எதிலும் இருக்கவில்லை. ஆனால் கட்சியின் உண்மையான விசுவாசி என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். உத்தமராஜனுக்கு ஊரில் இருக்கும் ஒரே திரையரங்கின் எதிரில் ஒரு புரோட்டாக் கடை இருந்தது. சிறிய கடை என்றாலும் சுவையான சால்னாவுடன் புரோட்டா கிடைக்கும் என்பதால் கூட்டம் நிரம்பி வழியும். கடையிலும் எல்லா இடத்திலும் கலைஞர்தான். கடையின் பெயர் கூட கறுப்பு சிவப்பில்தான் எழுதப்பட்டிருக்கும்.

காந்தியிடம் பேசும்போதெல்லாம் "ஏண்டா உங்க அப்பாவுக்கு கருணாநிதின்னா ரொம்ப பிடிக்குமாடா? உங்க வீடு பூராம் கலைஞர் படமா இருக்கு??"ன்னு ஆச்சரியத்துடன் கேட்டோம். "அவருக்கு கலைஞரை மட்டும் யாராவது குறை சொன்னால் கெட்ட கோவம் வரும்டா.. அடிபின்னிருவார்" ன்னான். எங்கள் நண்பர் குழுவில் இருந்த துடுக்கு ரீகன் மட்டும் "டேய் உங்க அப்பா இன்னிக்கு மதியம் வீட்டில் இருக்கிறப்போ நான் 'கலைஞர் ஒழிக'ன்னு உங்க வீட்டு வாசலில் நின்னு கத்துவேன். உங்கப்பா என்ன செய்றார்னு பார்ப்போம்"ன்னு சவால் விட, எங்களுக்கும் ஆவல் அதிகமாகி நடப்பதைப் பார்ப்போம்னு கமுக்கமா இருந்துட்டோம்.

அன்னிக்கு மதியம் ரீகன் காந்தி வீட்டு வாசலில் நின்று "கலைஞர் ஒழிக" அப்படின்னு கத்த, நடுப்பத்தியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த உத்தமராஜன் திடுதிடுவென வாசலுக்கு வந்து ரீகனின் பிடறியில் ஒரு அறைவிட்டார். சற்றும் எதிர்பார்க்காத ரீகன் பொறி கலங்கிப் போய் அழுது கொண்டே ஓட்டமெடுத்தான். பொன்னம்மாள் அக்கா வீட்டு மாட்டுக் கொட்டகைக்குப் பின்னால் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்குக் குப்பென வேர்க்க ஆரம்பித்தது.

அதன்பின் சிவருடங்களில் உத்தமராஜனின் தம்பிகள் பெரிய ஆட்களாகிவிட அவர்களின் உழைப்பால் ராஜன் புரோட்டா ஸ்டால் ஊருக்குள் மேலும் நான்கு இடங்களில் கிளைகளைத் தொடங்கியது. வருடங்கள் அதிகமாக ஆக ராஜனின் கட்சிப்பற்று கூடிக்கொண்டே போனது. ஊருக்குள் கட்சியின் முக்கியமான நிதி ஆதாரமாக மட்டுமே இருந்த ராஜன், கட்சியில் எந்தப் பதவியும் கேட்டு வாங்கவில்லை. உண்மையான விசுவாசிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குக் கட்சியில் பதவிகள் வாங்கிக் கொடுக்கும் ஒரு ஏணியாகவே இருந்தார்.

வருடங்கள் ஓடின. 2001 தேர்தல் நிதிக்கு கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தினால் கொஞ்சம் அதிகமாகவே பணம் கொடுத்திருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக தோல்வி. விரக்தியாலும், தோல்வியை ஏற்றுக் கொள்ளமுடியாத மனநிலையினாலும் அதிகமாகக் குடித்து விட்டு வந்து தன் வீட்டின் கூரை மேல் தானே கல்லை விட்டு எறிந்து சத்தம் போட்டு புலம்பிக் கொண்டிருந்தார். காந்தியும் காந்தியின் அம்மாவும் அவரைச் சமாதானப்படுத்தி வீட்டுத்திண்ணையில் உட்கார வைத்த போது சின்னக் குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டார். காந்தியின் தம்பி ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதது கூட அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்தத் தேர்தல் முடிவினால் அவர் மிகவும் மனமுடைந்து போய்விட்டார்.

ராஜனின் தம்பிகளுக்கு இந்த அரசியல் எல்லாம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இருந்தாலும் அண்ணனை எதிர்த்துப் பேசமுடியாமல் இருந்தனர். இப்போது தேர்தலுக்காக எக்குத்தப்பாகப் பணத்தைச் செலவு செய்ததால் கடுப்பான அவர்கள் "எங்களிடம் கேட்காமல் எப்படி பொதுப்பணத்தில் இருந்து கட்சிக்குக் கொடுக்கலாம்?" என்று சண்டை போட்டு அவரவர்கள் தனித்தனியே கடைகளைப் பிரித்துக் கொண்டு போய்விட்டார்கள். ராஜனின் வணிகம் இப்போது ஒரு கடையுடன் சுருங்கிவிட்டது. மூன்று பெரிய பிள்ளைகள் வேறு. நாங்கள் கல்லூரியில் சேர்ந்தபோது காந்தி பள்ளிப்படிப்புடன் நின்று விட்டு கடையைப் பார்த்துக் கொண்டான்.

நானும் அதன்பின்னர் இளங்கலை, முதுகலை படிப்புகள் முடித்து ஊரையும் காலி பண்ணிப் போய்விட்டதால், நிறையப் பேருடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. மூன்று மாதங்கள் முன்பு துபாயில் இருக்கும் முத்துவிடம் இணைய அரட்டையின் போது எதேச்சையாக காந்தியைப் பற்றி விசாரிக்க "டேய் அவங்க அப்பா இப்பவெல்லாம் முந்தி மாதிரி இல்லடா .. ரொம்ப மாறிட்டார்டா .. ஊருக்குப் போய் ஒருதடவை காந்தியைப் பாருடா.. உன்னை ரொம்ப கேட்டான்" என்று சொன்னதும் எனக்கும் ஊருக்குச் செல்லும் ஆவல் ஒட்டிக் கொண்டது.

பங்குனிப் பொங்கல் விழாவிற்கு ரொம்ப வருடங்கள் கழித்து இந்த வருடம் போன போது காந்தியின் புரோட்டாக் கடைக்குப் போனேன். வெளியில் ராஜனின் ட்ரேட்மார்க் சைக்கிளைக் காணவில்லை. அதற்குப் பதில் ஒரு பழைய சைக்கிள் எந்தவித அலங்காரமும் இல்லாமல் செயின் கார்டில் வெள்ளைப் பெயிண்டில் 'ராஜன் புரோட்டா ஸ்டால்' என்று எழுதப்பட்டிருந்தது. கடையின் உள்ளே பெரிய பெரிய கலைஞர் படங்கள் எல்லாம் கழட்டப்பட்டு, ராஜன் இளைஞராக இருக்கும் போது கலைஞருடன் எடுத்துக் கொண்ட கறுப்பு வெள்ளைப் படம் மட்டும் மாட்டப்பட்டிருந்தது. உள்ளே ராஜன் கல்லாவில் நின்று கொண்டிருந்தார். கரைவேட்டி இல்லை. ஆனால் கலைஞர் படம் போட்ட மோதிரம் போட்டிருந்தார். முறுக்கு மீசையில் ஏகப்பட்ட நரைமுடிகள். பார்த்ததும் "ஏய் வாப்பா வாப்பா என்ன ஆளையே காண்றதில்லை? சொந்த ஊரை மறக்கக் கூடாதுப்பா"ன்னு அறிவுரை கூறினார்.

"அப்படியெல்லாம் இல்லை அப்பா ! வேலை அதிகமாக இருப்பதால் வரமுடிவதில்லை"ன்னு மழுப்பி, "காந்தி எங்கே?" "பலசரக்கு வாங்கப் போயிருக்கான்பா. நீ சாப்பிடு அதுக்குள்ள வந்துருவான்"ன்னு சொல்லி அவரே இலை எல்லாம் எடுத்துப் போட்டு மூன்று புரோட்டாக்களை பிய்த்துப் போட்டு மணக்கும் சால்னாவை அதில் ஊற்றிவிட்டுப் போனார். ஒரு வெட்டு வெட்டிவிட்டு கல்லாவில் நின்று கொண்டிருந்த அவரிடம் "எப்படி அப்பா ! இப்படி மாறிட்டீங்க?" "எதைச் சொல்ற கட்சி வேட்டி கட்டுறதில்லையே அதையா? அட ஆமாம்பா கட்சிப்பாசம், கொள்கையெல்லாம் மனசளவில் மட்டுமே இருக்கு. ஓட்டு மட்டும் என் தலைவனுக்கு மறக்காம போட்டுடுறோம்". "எனக்கு விவரம் தெரிஞ்சதிலயிருந்து கட்சியில் இருக்கீங்களே அப்பா! கண்டிப்பா அதுக்கான பலன் ஒருநாள் கிடைக்கும். கவலைப்படாதீங்கப்பா". "ஹஹாஹா ! அதுவும் இன்னிக்கு நடந்திருச்சுப்பா !" அப்படின்னு சொல்லி அன்றைய முரசொலியை எடுத்துக் காண்பித்தார்.

'பத்து வருடங்களுக்கு மேல் கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்தவர்களுக்காக பொற்கிழி வழங்கப்படும்' என்ற செய்தியுடன் மாவட்டவாரியாக அவர்களது பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அதில் இராமநாதபுரம் மாவட்டத்தின் கீழே உத்தமராஜனின் பெயர் மூன்றாவதாக இருந்தது. நான் அவரைப் பெருமிதத்துடன் பார்த்தேன். அவர் கையில் இருந்த மோதிரத்தில் கலைஞர் சிரித்துக்கொண்டிருந்தார்.

Saturday, May 01, 2010

பதிவு போட வச்ச பரபரப்பு செய்திகள்


ரொம்ப நாள் ஆகிட்டே போகுது பதிவு போட்டு.... சரி கிடைச்ச நேரத்துல சின்னதா ஒன்னு ... சமீபத்தில் பரபரப்பான செய்திகளுக்குப் பஞ்சமே இல்லை.

முதல்ல நித்யானந்தா. எனக்கு எப்ப்வுமே சாமியார்கள் மேல ஒரு கரிசனமோ ஈர்ப்போ இருந்ததே இல்லை. ஏன்னா நான் சின்னப்புள்ளயா (இப்போ மட்டும் வளந்துட்டமாக்கும்..ம்க்கும்..) இருந்தப்போ சங்கராச்சாரியார் என்ற ஜெயேந்திரர் வந்திருந்தார். கோவில்ல ஏதோ பிரசங்கமெல்லாம் பண்ணினார். 'சாமியை யாரும் தொடாதீங்கோ' என்ற அதட்டலுக்கு நடுவில் பக்தர்கள் ஆசிபெற துடித்துக் கொண்டிருந்தார்கள். நான் பக்கத்தில் ஏதோ வேன் இருக்கே என்று போய்ப் பார்த்தேன். சகல வசதிகள், ஏசி, படுக்கை, சமயலறை, இரு உதவியாளர்கள் கிட்டத்தட்ட மினி வீடு மாதிரி இருந்தது. சாமியார்னாலே கஷ்டப்படணும் ஓட்டாண்டியா நின்னு மக்களுக்கு அறிவுரை சொல்லணும்கிற பிம்பம் மனசுல பதிஞ்சு போனதால எனக்கு அப்பலருந்தே சாமியார்களைப் பார்த்தால் பிடிக்காமப் போச்சு. சரி அப்ப ஓட்டாண்டியா நிக்கிற சாமியார்களைப் பிடிக்குமான்னா அதுவும் இல்லை. சும்மா சாமி பேர சொல்லிட்டு பிச்சை எடுக்கிறானுக பாரு என்றுதான் தோணும். :‍)

நித்யானந்தா மட்டுமல்ல ... இந்த பணக்கார கார்ப்ரேட் சாமியார்கள் எல்லாருமே அழிக்கப்படவேண்டும். பக்தர்களை போதைக்கு அடிமையாக்கி வைத்திருக்கும் கல்கி, தான் போகும் இடமெல்லாம் பணக்காரர்களின் வீடுகளில் பூஜை செய்கிறேன் பேர்வழி என்று பணத்தைத் திருடும் அமிர்தானந்தமயி, (பங்காரு, ரவிசங்கர், ஜக்கிவாசுதேவ் எல்லாம் பிராடுகளான்னு தெரியல்.. யாராவது சொல்லுங்க) இன்னும் குறிசொல்றேன்னு போட்டி போட்டு ஆளுக்கு ஒரு அம்மனையும், கருப்பசாமியையும், அகத்தியரையும், ஆஞ்சநேயர் பெயரைச் சொல்லியும் பிழைப்பு நடத்தும் பிச்சைக்காரர்களும் ஒழியவேண்டும்.

மனஅமைதி வேணும்னா கோவிலுக்குப் போ, கண்ட கருமம் பிடிச்ச நாய்கள்ட்டயும் ஏன் காசைக் கொண்டு போய் கொட்டுறீங்க. ரொம்ப பணம் இருந்தா என் அக்கவுன்ட் நம்பர் தாரேன் அதுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணுங்க. வெட்டிப்!@#$$க....

சானியா‍‍ சோயப் மாலிக். ஏன் எல்லாரும் இந்தியா பாகிஸ்தான்னு சண்டை போடுறாங்கன்னு தெரியல.. இதே ஒரு பாகிஸ்தான் பொண்ணு இந்தியாவுக்கு கல்யாணமாகி வந்தா பத்திரிக்கைகள் 'மருமகளே வருக!' என எழுதியிருக்கும். அதே நேரம் சானியா சோயப் ஆயிஷா எல்லாமே அவங்க குடும்ப விசயம். அதுக்குப் போயி இந்த வ(ம)ட இந்திய ஊடகங்கள் இவ்வளவு பெருசு பண்றாங்கன்னு தெரியல. எதற்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் சண்டையிட்டு விவாகரத்து பெற்று சோயப்பின் முகத்திரையைக் கிழத்த ஆயிஷா பாராட்டுக்குரியவர். வெட்கக்கேடான ஒருவிசயம் சானியா சோயப் விசயம் பீக்ல இருந்தப்போ நக்சல் தாக்குதலில் 53 ராணுவ சகோதர்கள் கொல்லப்பட்டது இந்த மட இந்திய மீடியா நாய்களால் பின்னுக்குத் தள்ளப்பட்டதுதான். நாசமாப் போக.

அடுத்து ஐபிஎல் லலித்மோடி. ஐயா செம கில்லாடி. கிரிக்கெட் விளையாட்டின் ஒவ்வொரு சின்னவிசயத்தையும் பைசாவாக மாற்றியவர். 'தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?' பிசிசிஐக்கு 5000 கோடின்னா எனக்கு 500 கோடின்னு நல்லா கமிசன் அடிச்சு ஜமாய்ச்சிருக்கார். இப்போ போயி வருமானவரி சோதனை பண்றாங்களாம். ஒன்னியும் பண்ணமுடியாது. பின்னால ஏகப்பட்ட்ட கைகளுக்குப் பங்கு இருக்கு போல. ஐயா இவனுங்க இப்படி கோடிக்கணக்குல வ்ரி ஏமாத்தியிருக்கானுகளே, 2007ல் எனக்கு நீங்க 4200 ரூபா கூடுதலா செலுத்துன வரியை திரும்பத் தரணுமே எப்பத் தரப்போறீங்க?

தமிழ்நாட்டில் அழகிரி. சானசே இல்லை. திமுக தலைவர் தேர்தல் வந்தால் போட்டியிடுவேன்னு சொல்லி குட்டையைக் குழப்பிட்டு ஜாலியா வெளிநாடு போயிட்டார். தமிழ்ல தான் நாடாளுமன்றத்துல பேசுவேன்னு அடம்பிடித்து தமிழுக்கு அங்கே இடம்வாங்கிக் கொடுத்தால் புண்ணியமாப் போகும்.

ஸ்டாலின் மேல் எப்பவுமே ஒரு மரியாதை உண்டு. இரு நாட்களுக்கு முன் தவறான சிகிச்சையால் கண்பார்வை பாதிக்கப்பட்ட தங்கை சுரேகாவின் சிகிச்சைக்கு முழுச் செலவையும் ஏற்று தான் ஒரு சிறந்த மனிதநேயமிக்க மனிதர் என்று உணர்த்தியிருக்கார். இதுபோல தன் பேர்கூட வெளிய வராம எவ்வளவோ பேர் உதவிகள் செய்றாங்க. அவங்களுக்கும் ஒரு வணக்கம்.

ஐபிஎல்ல சென்னை வென்றது மகிழ்ச்சி. அதிலும் 'வெற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம்' என்ற ஹைடன் பேச்சு ஹைலைட். தோத்துப் போன‌ மும்பை பசங்க மேட்ச் பிக்சிங்னு புலம்புறதெல்லாம் ஓவர். போனதடவை நாங்க ராஜஸ்தான்கிட்ட தோத்தப்ப இப்படியா புலம்பினோம். சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு... :)

இன்னும் இருக்கு ... அப்புறமா சொல்றேன்.

ஓட்டப் போட்டுட்டுப் போங்க சாமி ....

Friday, April 09, 2010

Bear Grylls - பயம் அறியான் !!


Bear Grylls - பேர் கிரில்ஸ். இந்தப் பெயர் உங்களுக்கு மிகவும் பரிச்சயமாக இருக்கும் நீங்கள் டிஸ்கவரி சேனலை விரும்பிப் பார்ப்பவர் என்றால். இவர் தான் 'ஆபத்தை அரவணைக்கும் அசகாய சூரர்' என்ற அடைமொழியுடன் Man vs Wild என்ற நிகழ்ச்சியில் சாதித்துக் காட்டுபவர்.

தன்னந்தனியே காட்டிலோ, பாலைவனத்திலோ, பனிப்பிரதேசத்திலோ, கடலிலோ, தீவிலோ, ஆற்று வெள்ளத்திலோ நாம் மாட்டிக் கொண்டால் எப்படி சமயோசிதமாகச் சிந்தித்தும், இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை மட்டுமே வைத்து அந்தச் சூழலிலிருந்து உயிர் தப்பிப்பது என்பதைக் காட்டுவது தான் இந்த Man vs Wild.

இந்த நிகழ்ச்சியில் தான் இக்கட்டான சூழலில் மாட்டிக்கொள்ளும் மனிதராக வந்து கலக்கும் ஹீரோதான் Bear Grylls - பேர் கிரில்ஸ். யார் இவர்? இவருக்கு ஏன் இந்த வெட்டி வேலை?

Bear Grylls - பேர் கிரில்ஸ் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். 35 வயதாகும் இவர் பிரிட்டனின் விமானப்படையில் பணியாற்றியவர். 24 வயதிலேயே எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் ஆங்கிலேயர். ஆபத்துகளை எதிர்நோக்கி அவற்றில் இருந்து மீண்டுவருவதில் கரைகண்டவர். அபாயங்களைக் கண்டு அஞ்சாதவர். ஏன் அதைப் பற்றியே சிந்திக்காதவர்.

தான் இராணுவத்தில் பணியாற்றியபோது கற்றுத் தரப்பட்ட உபாயங்களைக் கொண்டும் , தானாக அறிந்தவற்றைக் கொண்டும் இவர் இந்த நிகழ்ச்சியில் ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்டு அவற்றை வெல்கிறார்.

விமான விபத்துகளில் சிக்கியும், போர்க்காலங்களில் வேறுவழியின்றி தனிமையில் மாட்டிக் கொள்ள் நேரிடும் வீரர்கள் எப்படி அந்த சூழலை எதிர்கொண்டு உயிருடன் மீண்டு வருவது என்பதை மக்களுக்கு உணர்த்தவேயாம்.

அப்படி என்ன தான் இவர் சொல்லித் தருகிறார்? அதுதான் Survival Techniques.
மனிதன் உயிர்வாழ நெருப்பு அவசியம். கையில் தீப்பெட்டியோ, லைட்டரோ இல்லாத நிலையில் எப்படி நெருப்பு பற்ற வைப்பது, எப்படி காட்டுக்குள் குடில் அமைப்பது, எந்த‌ வ‌கையான‌ செடிக‌ள், ப‌ழ‌ங்க‌ள், காளான்க‌ளைச் சாப்பிட‌லாம், சூழலை உணர்ந்து எப்படி தப்பிப்பது உதாரணமாக ஆற்று வெள்ளம் திடீரென் அதிகமானால் அதை எப்படி உணர்வது போன்றவை.

மனிதர் வெளுத்துக் கட்டுகிறார். மலையேறுவதில் கில்லாடி. இண்டு இடுக்குகளில் நுழைந்து, கும்மிருட்டாய் வௌவால்கள் நிறைந்த குகைக்குள் அலைந்து, நீருக்குள் மூழ்கி என தன் சாகசத் திறமைகளால் நம்மைத் திக்குமுக்காடச் செய்கிறார்.

இவர் பச்சையாக சாப்பிடாத பூச்சிகள், பாம்புகள், நத்தைகள், மீன்கள், தவளை, பல்லிகள் கிடையாது. 'புரதச்சத்து அதிகம் கிடைக்கும்' என்று எல்லாத்தையும் அப்படியே கடித்துத் தின்பார். ஏன் ஒருமுறை தண்ணீர் தாகம் என்று பாலைவனத்தில் சிறுநீரையும் குடித்தார். இதெல்லாம் செய்தால்தான் இக்கட்டான சூழலில் நாம் உயிர் வாழமுடியும் என்று சொல்கிறார். நமக்காக பாவம் மனிதர் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது?? இவர் வீட்டில் எப்படித்தான் பொறுத்துக் கொள்கின்றனரோ? சும்மா சொல்லக் கூடாது ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் உலகம் முழுவதும்.

இவ்வளவு திறமைகள் இருந்தும் மனிதர் ஏகப்பட்ட சர்ச்சைகளிலும் மாட்டியிருக்கிறார். முதன்முதலாய் இவரது நிகழ்ச்சி ஒளிபரப்பனபோது இவர் காட்டுக்குள் தனியே இருப்பது போல காட்டியவுடன், 'தனிமனிதனுக்கு எப்படி தகுந்த பாதுகாப்பு இல்லாமல் இப்படி தவிக்கவிடலாம்?' என்று சர்ச்சை எழுந்திருக்கிறது. அதன் பின்னர்தான் 'தனிமனித பாதுகாப்பு சட்டவிதிகளின் படி பாதுகாப்பு' வழங்கப்படுவதாக நிகழ்ச்சி துவங்கும் முன்னர் போட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதுவாவது பரவாயில்லை. தான் நடத்தும் நிகழ்ச்சியின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு உண்மை பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு இவரது இமேஜ் அதலபாதாளம் சென்றுவிட்டது. அது என்ன? இவரைப் போன்றே 'Les Stroud - லெஸ் ஸ்ட்ராடு' என்றொரு 'காட்டுவாசி' இருக்கிறார். இவரது ரசிகர்களுக்கும், Bear Grylls - பேர்ல் கிரில்ஸின் ரசிகர்களுக்கும் இணையத்தில் ஒரே முட்டல் மோதல் தான். ஏன் இப்படி? Bear Grylls - பேர்ல் கிரில்ஸ் உண்மையிலே திறமையானவரா அல்லது அப்படி முன்னிறுத்தப்படுகிறாரா? Bear Grylls vs Les Stroud யார் சிறந்த காட்டுவாசி அல்லது ஆபத்துகளை வெல்பவர்? இதல்லாம் அடுத்த பதிவில் பார்க்கலாமே?