Monday, August 20, 2007

நாங்கள்லாம் ஜெயில் பறவைங்க .. தெரியுமுல்ல ..

"லஞ்சம் வாங்கினதுக்காக சிறையில் போட்டாலும் நான் திருந்த மாட்டேன். லஞ்சம் வாங்குவது என் பிறப்புரிமை. நாங்கள்லாம் ஜெயில் பறவைங்க .. தெரியுமுல்ல .." என்பது போல் போன வாரம் இராமநாதபுரத்தில் ஒரு அரசு அதிகாரி செய்த செயல் மிகவும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரில் இருக்கும் அரசு அலுவலகங்களில் ஒன்று பொதுப்பணித்துறை - கட்டிடம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலுவலகம் (Public Works Department - Building Construction and Maintenance). இங்கு செயற்பொறியாளராகப் (Executive Engineer) பணிபுரிபவ(ந்தவ)ர் வள்ளிமுத்து. இராஜபாளையத்துக்காரர். சில வருடங்களாக இராமநாதபுரத்தில் பணிபுரிந்து வருகிறார். பைசா சுத்தமாக பெர்சண்டேஜ் கணக்குப் பண்ணி லஞ்சம் வாங்குவதில் கில்லாடியாம்.

பொதுவாக எல்லா அரசு அலுவலகங்களிலும் ஒப்பந்தகாரர்களுக்குப் பில் பாஸ் பண்ணும் போது, அலுவலர்கள் ஒப்பந்தகாரர் கொடுக்கும் அன்பளிப்புத் தொகையை அவர்களுக்குள் பங்கு போட்டுக் கொள்வது வழக்கம். இவர் கொஞ்சம் பேராசைக்காரர் போல.

அப்படித்தான் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கும் வேலையை குத்தகைக்கு எடுத்த ஒப்பந்தகாரரிடம் 20,000 லஙஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டார். முதலில் ஒப்பந்தகாரரிடம் லஞ்சம் கேட்டிருக்கிறார். அவர் கொடுக்க மறுக்கவே, பணிகளைத் தாமதமாகச் செய்வதாக சுமார் ஒரு லட்சம் அபராதம் போட்டுவிட்டாராம். பின்னர் மீண்டும் லஞ்சம் கேட்கவே அந்த ஒப்பந்தகாரர் முதலில் 10,000 மட்டும் கொடுத்திருக்கிறார். அதெல்லாம் பத்தாது இன்னும் 10,000 வேணும் என்று அதிகாரி கேட்கவே, பொறுமையிழந்த ஒப்பந்தகாரர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்ய முடிவு செய்துள்ளார்.

இவர் ஏற்கனவே இதே போல் வருவாய்த் துறையில் இரண்டு அதிகாரிகளையும், பொதுப்பணித்துறையில் இரண்டு அதிகாரிகளையும் லஞ்சம் கேட்டதற்காக மாட்டிவிட்டிருக்கிறாராம். தைரியமானவர்தான். ஒப்பந்தகாரர் லஞ்ச

ஒழிப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கும் முன்னர் அந்த அலுவலகத்தில் இருந்த சில நெருக்காமான ஊழியர்களிடம் தான் அதிகாரியை ரெண்டில் ஒன்று பார்க்கப் போவதைத் தெரிவித்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அதிகாரியிடம் பக்குவமாக விசயத்தைச் சொல்லியிருக்கின்றனர். "லஞ்சம் வாங்கீராதீங்க. மாட்டிக்குவீங்க. அந்தாளு மோசமானவர். ஏற்கனவே இது மாதிரிப் பண்ணியிருக்காரு. நீங்க எப்படியும் இன்னும் கொஞ்ச நாளில் ஓய்வு பெறப் போகிறீர்கள். நல்ல பேரோட நீங்க போகணும் சார்" என்று கெஞ்சாத குறையாகச் சொல்லியிருக்கின்றனர். "என்னய்யா பிழைக்கத் தெரியாத ஆளா இருக்கீங்க. நான் இவன மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருக்கேன்" என்று தெனாவெட்டாகப் பதில் சொல்லியிருக்கிறார்.

மறுநாள் ஒப்பந்தகாரர் 10,000 லஞ்சப் பணத்தைக் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் வசமாக மாட்டிக் கொண்டார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர்களிடம் புகார் வந்தவுடன், அவர்கள் கொடுக்கும் பணத்தைத் தான் அந்தக் குறிப்பிட்ட அதிகாரியிடம் கொடுக்க வேண்டுமாம். அந்த ரூபாய் நோட்டுக்களின் எண்களைக் குறித்து வைத்திருப்பராம். அதுபோல ரூபாய் நோட்டுக்களின் மீது ஏதோ பொடி ஒன்றையும் தடவி இருப்பார்களாம். கவரில் இருந்து பணத்தை எடுத்துத் தொட்டவுடன் கையில் ஏதோ வண்ணமாக ஒட்டிக்
கொள்ளுமாம். இதைத் தான் கையும் களவுமாகப் பிடிப்பது என்கிறார்களோ?

பின் காவல்துறை அவர் தங்கியிருந்த அறையைச் சோதனை போட்ட போது கவர் பிரிக்காமல் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் சிக்கியது. பின்னர் பிடிபட்ட அதிகாரியை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது பெயிலில் எடுக்க யாரும் வரவில்லை. அரசு அலுவலர் சங்கமும் ஒதுங்கிக் கொண்டது. அதிகாரிக்கு மிகவும் நெருங்கிய நண்பரான ஒரு உதவிப் பொறியாளர் வந்து பெயிலில் எடுத்து வந்திருக்கிறார்.

இதற்கு அப்புறம்தான் ஹைலைட். வீட்டுக்கு வந்த அதிகாரி சும்மா இருக்காமல் மற்றொரு ஒப்பந்தகாரருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது பில்களையெல்லாம் வீட்டுக்குக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறார். அந்தப் பிலகளில் முன்தேதியிட்டுக் கையொப்பமிட்டு அவரிடம் 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கியிருக்கிறார். :O . ரிஸ்க் எடுக்குறது இவருக்கு ரஸ்க் சாப்புடுறமாதிரி போல.

என்ன தில்லு? என்ன தெனாவெட்டு? கொஞ்சம் கூடக் குற்ற உணர்வு இல்லாமல் கைதாகி வீட்டுக்கு வந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் லஞ்சம் வாங்கியிருக்கிறார். விசயத்தை மோப்பம் பிடித்த காவல் துறை அந்தாளைப் பெயிலில் எடுத்த அதிகாரியைப் பிடித்து ஏறிவிட்டார்களாம். "அவனெல்லாம் பாவம்ன்னு நீ அவனுக்கு பெயில் எடுத்தியே? இப்பப் பாரு பயமேயில்லாம திரும்பவும் லஞ்சம் வாங்கியிருக்கான். நான் திரும்பவும் கேஸ் போட்டால் அது உனக்குத் தான் சிக்கல். ஒழுங்கா இருக்கச் சொல்லு அவனை" என எச்சரித்திருக்கிறார்கள்.

இப்போ அந்த அலுவலகத்தில் இருக்கும் எல்லா அதிகாரிகளும் ஒட்டு மொத்தமாக அருகில் உள்ள ஊர்களுக்கு மாற்றல் கேட்கும் முடிவில் இருக்கிறார்களாம். ஏன்னா பார்க்கிற எல்லோரும் "உங்க EE லஞ்சம் வாங்கி மாட்டிக்கிட்டாராமே? நீங்களும் அந்த மாதிரி வாங்கி மாட்டிக்காதீங்க" என்று அறிவுரை கூறுகிறார்களாம்.

மேலே சொன்னது இரண்டு வாரங்களுக்கு முன் நடந்தது. ஒரு வாரம் விடுப்பு போட்டுட்டு வூட்டுல குந்தினுருந்ததுனால தாமதம்.

Thursday, August 16, 2007

பதிவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? - ஒரு ஜாலி கற்பனை

சும்மா கலாய்ப்புக்குத் தான். நம்ம பதிவர்கள் எல்லோரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று எட்டிப் பார்த்தபோது தெரிந்தவை. ரெடி ஸ்டார்ட்.

பாலபாரதி - அடுத்த பதிவர் பட்டறையில் எந்தப் பத்திரிக்கையாளரையும் உப்புமா பேச்சுக்குக் கூப்பிடக்கூடாது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

பொன்ஸ் - தன் profileல் போட நல்ல யானை படங்களை நெட்டில் தேடிக்கொண்டிருக்கிறார். ஓடிப்போன எலிக்குட்டியைப் பிடிக்க பல்கலைக்கழகம் முழுவதும் பொறி வைக்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார்.

ரவிசங்கர் - விக்கிபீடியா, விக்சனரி, தமிழ்மணம் என்று மாற்றி மாற்றிப் பார்த்தாலும் ஃபிரஷ்ஷாக இருக்கிறார்.

அபி அப்பா - கிடேசன் பார்க்கில் உட்கார்ந்து கொண்டு 49,50,51 என பின்னூட்டங்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். கால் மணி நேரமாகப் பின்னூட்டம் வராததால் கை நடுக்கம் ஆரம்பிக்கிறது அவருக்கு.

குசும்பன் - அடுத்து யாரைக் கலாய்க்கலாம் என்று லேப்டாப்பில் அர்னால்ட் படத்தையும், பதிவர்களின் படங்களையும் வைத்துக் கொண்டு, யார் தலையை அர்னால்ட் படத்தில் பொருத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். இறுதியில் அபி அப்பாவின் படத்தைத் தேர்வு செய்கிறார்.

லக்கி லுக் - தன் கிழிந்து போன டவுசரை டெய்லர் கடையில் கொடுத்துத் தைத்துக் கொண்டிருக்கிறார். "என்னப்பா இவ்வளவு மோசமாக் கிழிஞ்சிருக்கு" என டெய்லர் கேட்க, "செருப்பால அடிப்பேண்டா, ஒழுங்கா வேலையைப் பாரு" எனப் பதிலளிக்கிறார்.

அய்யனார் - சீரியசாக யோசித்துக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறார். அவரது கவிதையைப் படித்துக் கொண்டிருக்கும் பதிவர் ஒருவர் தலையைச் சொறிந்து கொண்டிருக்கிறார்.

இளவஞ்சி - பின்நவீனத்துவமாகப் பின்னூட்டம் எழுத, எதிர்த்துக் கேள்வி கேட்டவர் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுகிறார்.

வ.வா.ச - அடுத்து யாரை அட்லாஸ் வாலிபராகப் போடுவது என்று மெயிலில் டிஸ்கசன் நடந்து கொண்டிருக்கிறது. தலயின் ரெக்கமெண்டுகளை சகட்டுமேனிக்கு ரிஜக்ட் செய்கிறார்கள் அப்ரசண்டுகள்.

கண்மணி - டீச்சர் எப்படா கேப்பு கிடைக்கும், கும்மியடிக்கலாம் என்று மைக்ராஸ்கோப்பினால் தமிழ்மணத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்பல்லாம் அவருக்கு 'புலி'யோதரை .. சாரி .. புளியோதரை-ன்னாலே அலர்ஜியாம் !

செந்தழல் ரவி - கொரியாவில் எடுத்த பிகர் படங்களை லேப்டாப்பில் பார்த்துப் பெருமூச்சு விடுகிறார்.

டோண்டு - சமீபத்தில் 1970ல் தான் பிறந்தநாள் கொண்டாடியதைப் பற்றிப் பதிவெழுத வேண்டும் என்று நினைக்கிறார்.

'டெக்' தீபா - மேடம் பிளாக்கிங்கில் PHD வாங்கிவிட வேண்டுமென்று கொலைவெறியோடு ஜாவா ஸ்கிரிப்ட் கோட் எழுதிக் கொண்டு இருக்கிறார்.

இராம் & இம்சையரசி - என்னோட சங்கம் தான் பெருசு என்று மாற்றி மாற்றிப் பின்னூட்டங்களில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஓசை செல்லா - அவரது வீட்டுக்குள் இருந்து ஊ ஆ என சத்தம் வருகிறது. வெள்ளை நிற உடையில் கராத்தே பழகிக் கொண்டு இருக்கிறார். அதைத் தனது கேமராவில் பதிவும் செய்கிறார்.

மாலன் - பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கூட இனிமேல் எடுக்கக் கூடாது என்று துண்டைப் போட்டுத் தாண்டி சபதம் செய்கிறார்.

"போடுவார் மொக்கை என்றென்றும் அஃதிலார்
பதிவரல்லார் மொக்கை போடாதவர்" என்று ஒருவர் டைப்படித்துக் கொண்டிருக்கும் போதே அவர் பின் மண்டையில் பொளேர் என்று ஒரு அடி விழுகிறது. "what are you doing? Always reading blogs and typing in tamil. First I will tell the admin to block this blogger". அடி விழுந்தது எனக்குத்தான். கொடுத்தவர் என் மேனேஜர்.

Monday, August 13, 2007

இராமேஸ்வரம்-மானாமதுரை அகலரயில்பாதை துவக்கவிழா! மக்கள் உற்சாகம்! - வீடியோ மற்றும் படங்கள்


பணிகள் முடிவடைந்தும் நான்கு மாதங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த இராமேஸ்வரம்-மானாமதுரை அகலரயில் பாதை அர்ப்பணிப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. குறிப்பாக இராமநாதபுரத்தில் ஒரு வாரமாக மிகவும் எதிர்பார்க்கப்பட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் இரயிலை வரவேற்கத் தயாரானார்கள்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாதலால் இராமநாதபுரம் இரயில் நிலையம் முழுவதும் ஒரே கூட்டம். மக்கள் மாலை 4 மணி முதல் இரயிலைப் பார்க்க வந்து குவிந்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்ததால் சில இளசுகள் பெண்கள் இருக்குமிடத்திற்கு சென்று "இரயில் வந்துருச்சு.. இரயில் வந்துருச்சு.. " என்று கூவி விட்டு எஸ்கேப் ஆவதும், பெண்கள் ஓடிச் சென்று பார்த்துவிட்டு அசடு வழிந்து திரும்பிக் கொண்டுமிருந்தனர்.

பின்னர் இரயில் இராமேஸ்வரத்திலிருந்து மாலை 5:00 மணிக்குப் புறப்பட்டு சரியாக 6:15 மணியளவில் இராமநாதபுரம் வந்தடைந்தது. மக்களின் கொண்டாட்டத்துக்கு அளவேயில்லை. இதுவரை இரயிலையே பார்க்காதவர்கள் போல ஒரே அமர்க்களம். கட்சிக்காரர்கள் யாரும் இல்லாததால் தொல்லையில்லாமல் இருந்தது. எல்லோரும் மதுரைக்கு சோனியாவையும், கருணாநிதியையும் பார்க்க சென்று விட்டனர். இல்லையென்றால் வாழ்க கோசமும், தள்ளு முள்ளும் இருந்திருக்கும்.

ஏற்கனவே ஐந்து முறை ஒத்திப் போடப்பட்டு, ஆறாவது முறையாகத் திட்டமிடப்பட்டு முடிந்திருக்கிறது. இப்போதைக்கு சேது எக்ஸ்பிரஸ் மட்டும் மதுரை வழியாக சென்னைக்குத் தற்காலிகமாகச் செல்கிறது. திருச்சி-காரைக்குடி-மானாமதுரை அகலப்பாதை பணிகள் முடிந்ததும் வழக்கமான வழியில் செல்லும். மேலும் மதுரைக்கு இரண்டு பாசஞ்சர் இரயில்களும் விடப்பட்டுள்ளன. கருணாநிதி, சோனியா, லல்லு பிரசாத் போன்றோர் மதுரையிலிருந்து இரயிலைத் துவக்கி வைத்தார்கள்.

இந்த இரயில் துவக்கவிழாவிற்குத் தலைவர்களை அழைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாம் இரயில்வே அதிகாரிகளுக்கு. முதலில் ஏப்ரல் 1ல் (சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்)துவக்கவிழா இருக்கும் என இணை அமைச்சர் வேலு தெரிவித்தார். இப்போது ஆகஸ்ட் ஆகிவிட்டது.

வதந்திகளுக்கும் பஞ்சம் இல்லை. அப்துல் கலாம் வருகிறார் என்றார்கள். சட்டமன்றப் பொன்விழாவில அவர் கலந்து கொள்ளாததால், கருணாநிதி அப்துல் கலாம் வந்தால் தான் அந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொன்னதாகவும், இது தெரிந்து கலாம் விழாவைத் தவிர்த்து விட்டதாகவும், பின் சோனியா ஒப்புதல் பெற்று இராமேஸ்வரத்தில் ஏற்பாடுகளைச் செய்து விட்டு, பின்னர் பாதுகாப்புக் காரணங்களுக்காக என்று சொல்லப்பட்டாலும், 'இராமேஸ்வரம் சென்டிமென்ட்' - வந்தால் பதவி போய்விடுமாம் - காரணமாக மதுரைக்கு விழா மாற்றப்பட்டதாகவும் சொன்னார்கள். நல்லவேளை இவர்கள் யாரும் இராமேஸ்வரம் வரவில்லை. நகரம் தப்பித்தது.

134கிமீ தொலைவுள்ள ஒரு அகலப்பாதை திறப்புவிழாவுக்கு இவ்வளவு தடபுடல் தேவையா? இராமேஸ்வரம் வராமல் மதுரையிலிருந்து இரயிலைத் துவக்குவதற்கு, டெல்லியிலிருந்தே அதைச் செய்திருக்கலாம். எது எப்படியோ இரயில் வந்தாச்சு.

நம்ம ஊர் மக்கள் எத்தனையோ பேர் துவக்கவிழாவைப் பார்க்கமுடியாமல் போயிருக்கலாம் அல்லது வெளிநாடுகளில் இருக்கலாம். அவர்களுக்காக நான் எடுத்த வீடியோவும், சில படங்களும் கீழே. பார்த்து மகிழுங்கள்.


இராமேஸ்வரத்திலுருந்து இராமநாதபுரம் வரும் இரயிலை உற்சாகக் குரலெழுப்பி வரவேற்கும் மக்கள்



இரயில் இராமநாதபுரத்திலுருந்து மதுரை கிளம்புகிறது



புதிதாகக் கட்டப்பட்ட இராமநாதபுரம் இரயில் நிலையம்


இரயிலை வரவேற்கக் கூடியிருந்த மக்கள் கூட்டம்

























Wednesday, August 08, 2007

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 5


தொடர் முடிந்து திரை போடுற நேரம் வந்தாச்சு. எனவே இப்பதிவில் சில பொதுவான விசயங்களை மட்டும் சொல்லிடுறேன். போன பதிவில் என் அனுபவத்தில் ஒரு வங்கியின் ஏமாற்று வேலையையும், ஒரு வங்கியின் நல்ல மனசையும் பற்றி சொல்வதாகச் சொல்லியிருந்தேன்.

என்னிடம் சுமார் எட்டு வங்கிகளின் கடன் அட்டைகள் உள்ளன. அதில் ஏபிஎன் ஆம்ரோ வங்கியின் அட்டையும் ஒன்று. அதை நான் உபயோகிப்பதில்லை. ஆனால் முதல் மாதம் பில்லில் 150 ரூபாய் செலுத்தவேண்டும் என்று போட்டிருந்தார்கள். நான் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது "அது இன்சூரன்ஸ் சார். நீங்கள் கட்டுறதுன்னா கட்டலாம். இல்லைன்னா தேவையில்லை" என்றனர். எதற்கு இன்சூரன்ஸ்? அதை எதற்கு இவர்கள் பில்லில் போடுகின்றனர்? ஒருவேளை கட்டினால் எப்படி அந்தப் பணத்தைத் திரும்ப வாங்குவது? நான் எந்த இன்சூரன்ஸும் கட்டுவதாக அட்டைக்கு விண்ணப்பித்திருந்த போது குறிப்பிடவில்லையே? என நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவர்கள் பதில் அளிக்கவில்லை. அந்த மாதம் நான் அட்டையை உபயோகிக்காததால் நான் சுலபமாக பில்லில் அந்த 150ரூபாய் விசயத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். இப்போ ஒரு 10,15 முறை அட்டையை உபயோகித்துப் பொருள்கள் வாங்கியிருந்தால் பில்லில் அந்த 150ரூபாயை இன்சூரன்ஸை நாம் சரியாகக் கண்டுபிடிப்பது கடினம் தான். என்னைப் பொறுத்தவரை இது அந்த வங்கியின் ஏமாற்று வேலையே!

அப்புறம் நான் ஹெச்டிஎப்சி வங்கியின் அட்டையும் வைத்திருக்கிறேன். எனது சேமிப்புக் கணக்கு அந்த வங்கியில் இருந்ததால் முதலில் என் அனுமதி பெறாமலேயே எனக்கு ஒரு கடன் அட்டையை அனுப்பிவிட்டார்கள். கடுப்பில் ரொம்ப நாள் அதை உபயோகிக்காமலேயே வைத்திருந்தேன். பின்னர் சில மாதங்கள் கழித்து 1000 ரூபாய்க்கு அந்த அட்டையை உபயோகித்துப் பொருள் வாங்கினால் ஒரு வெள்ளி விளக்கு (Silver Diya) பரிசு என்று தூண்டில் போட்டனர். நானும் 1000 ரூபாய்க்கு மொபைல் ரீசார்ஜ் செய்து விட்டேன். சரியாக அடுத்த மாதம் ஒரு சிறிய வெள்ளி விளக்கு பார்சலில் அனுப்பிவிட்டனர். என்ன முதலில் படத்தில் பெரியதாகப் போட்டிருந்தனர். வந்திருந்தது அதில் கால்வாசிதான். பின்னர் ஒருதடவை பில் கட்ட மறந்துபோனதால் Late Fee என்று சுமார் 400 ரூபாய் போட்டு விட்டார்கள். தொடர்பு கொண்டு பேசியதும் Genuine Customer(?!) என்பதால் அதை விலக்கிவிட்டனர். எனது கடன் அட்டை வாழ்வில் நான் இதுவரை Late Fee கட்டியதில்லை எனற பெருமையைக் காப்பாற்றிக் கொடுத்தது அந்த வங்கி. அதற்காக நான் அந்த வங்கி நல்ல வங்கி என்று கூறவில்லை. எனது நண்பர்கள் சிலர் அந்த வங்கியைப் பற்றிக் குறைகளும் கூறுகின்றனர்.



அடுத்து HSBC, CITI, HDFC, ICICI, DEUTSCHE, ABN AMRO, STANDARD CHARTED, SBI. இந்த வங்கிகளின் கடன் அட்டைகள் அனைத்தும் நான் வைத்திருக்கிறேன். இவை போக Add-on என்ற பெயரில் வந்து சேர்ந்த அட்டைகளும் வேறு உள்ளன.அதனால் இந்த அட்டைகளை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல், ஒரு வீடு கட்டலாம் என முடிவு செய்து பெவிகால் மட்டும் வாங்கி அந்த அட்டைகளை ஒட்டி ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு அட்டைகள் தேவை கூரை போடுவதற்கு. வீடு கட்டி முடிந்தவுடன் சொல்கிறேன். பால் காய்ச்சும் போது எல்லோரும் கண்டிப்பாக வரவேண்டும். :)

(முற்றும்)

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 4
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 3
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 2
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 1

Thursday, August 02, 2007

தமிழக அரசுப் பேருந்துகளில் பட்டையைக் கிளப்பும் 'போக்கிரி' !




கடந்த வாரம் ஊருக்குப் போகும் போதும், திரும்பி வரும் போதும் ஐந்து முறை பேருந்தில் பயணம் செய்ததில் மூன்று முறை 'போக்கிரி' படத்தைப் பேருந்துகளில் பார்க்க நேர்ந்தது.முதலில் சேலத்திலிருந்து மதுரை வரும் போதும், பின்னர் திரும்பும் போது இராமநாதபுரத்திலிருந்து மதுரை வரும் போதும், பின் மதுரை-ஓசூர் பேருந்திலும் பார்க்க வேண்டிய நிலை. இது போதாதென்று உள்ளூர்த் தொலைக்காட்சியிலும் ஞாயிறன்று மதியம் சிறப்புப் படமாக ஒளிபரப்பி மகிழ்வித்தார்கள்.

மதுரை-ஓசூர் பேருந்தில் மக்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கிணங்க கொஞ்ச நேரத்தில் படம் நிறுத்தப்பட்டது. ஏனென்றால் எல்லோரும் சொன்ன காரணம் "எத்தனை தடவைங்க இந்தப் படத்தைப் பார்ப்பது?. எல்லா பஸ்ஸிலும் இதைத் தான் போடுறாங்க".

ம். சரி. ஏதோ நமக்கு லாபம். நான் இதுவரை போக்கிரி படம் பார்க்கவில்லை. நான் கடைசியாக திரையரங்கில் பார்த்த விஜய் படம் 'காதலுக்கு மரியாதை'. மத்ததெல்லாம் பைசா செலவில்லாமல் உள்ளூர்த் தொலைக்காட்சியிலும் அல்லது இப்படி பேருந்துகளில் பார்த்தது தான்.

படம் பார்க்கும் போது 'லொள்ளு சபாவின் பேக்கிரி' வேறு ஞாபகத்திற்கு வந்து சீரியஸ் காட்சிகளிலும் சிரிப்பை வரவழைத்தது. தலைப்பிலிருந்து தொடங்குது இவர்கள் அட்டகாசம். 'பேக்கிரி - 100% ஒன்னுமில்ல'. படத்தை இவர்கள் நக்கலடிக்கவில்லை. ஐயோ பாவம் விஜய்யைத்தான்.

லொள்ளு சபாவின் பேக்கிரியில் சில காட்சிகள்.

ஜீவா (விஜய்) : ஏண்ணா! அந்தக் காலம் நம்பியார், அசோகன் படத்தில தான் பொம்பளைகளை வச்சு வில்லத்தனம் பண்ணுவாங்க. நீங்க என்னடானா இப்பவும் அதே மாதிரி பண்றீங்க?
சாமிநாதன் (குரு) : நீ கூடத்தான் ரொம்ப வருசமா ஒரே மாதிரி நடிச்சுக்கிட்டிருக்க.. நாங்க எதாவது சொல்றமா? வந்தா வந்த வேலைய மட்டும் பாரு!


ஜீவா அலிபாயைப் பார்க்க நடந்து வருகிறார்.
சேச்சு (அலிபாய்) : என்னடா, தமிழ், தமிழ்ன்னு ஓவரா பில்டப் குடுத்தீங்க .. சப்பையா நடந்து வர்றான்.
ஜீவா (விஜய்) : அண்ணா! பேக் கிரவுண்ட் மியூசிக் இல்லாததால அப்புடி இருக்குங்கண்ணா! இப்போப் பாருங்கண்ணா .. பேக் கிரவுண்ட் மியூசிக்கோட எவ்வளவு பில்டப்பா வர்றேன்னு ..
(பேக் கிரவுண்ட் மியூசிக்குடன் ஸ்டைல் பண்ணிக் கொண்டே வருகிறார் ஜீவா)
சேச்சு (அலிபாய்) : புரிஞ்சிபோச்சு. பேக்கிரவுண்ட் மியூசிக், எபெக்ட் எல்லாம் இருந்தாத் தான் நீ தமிழு.. இல்லன்னா டுமிலு.


ஜீவாவை அடிக்க வில்லன்கள் வருகிறார்கள்.
ஜீவா (விஜய்) : நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டன்னா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்
வில்லன் 1 : டேய்! உன் பேச்சை நீயே கேக்கலன்னா அடுத்தவன் எப்படிடா கேப்பான்?
வில்லன் 2 : அவ்வளவு கேவலமா பஞ்ச் டயலாக் பேசுறாண்ணே!


அப்புறம் விஜய் சண்டை போடும் போதும், பாடல் காட்சிகளிலும் வரும் போது, திரையரங்கில் ஆடியன்ஸ் தூங்குவது போலக் காட்டுவார்கள். விஜய் 'ஆடுங்கடா என்ன சுத்தி' பாட்டு பாடும் போது திரையரங்கில் எல்லோரும் எழுந்து வெளியே போவார்கள்.

ஜீவா : அண்ணா ! அண்ணா ! எங்கண்ணா போறீங்க?
பார்வையாளர் : இப்பத்தான் சண்டையை முடிச்ச.. அடுத்து எப்புடியும் பாட்டுத் தான். அதுக்குள்ள போய் ஒரு தம் போட்டுட்டு வந்துடுறோம்.
ஜீவா : அண்ணா ! அண்ணா ! இருங்கண்ணா ..
பார்வையாளர் : இருக்க முடியலன்னுதாண்டா போறோம்.. புரிஞ்சிக்கடா ..
ஜீவா : அண்ணா ! அண்ணா ! ப்ளீஸ்ண்ணா ..
பார்வையாளர் : என்னப்பா இந்தப் பையன் இந்த மாதிரி தொல்லை பண்றான். எல்லாரும் உக்காருங்கப்பா !
(எல்லோரும் தூங்குகிறார்கள்)

ஜீவா ஆடிப்பாடுகிறார்.

பார்வையாளர் : நிறுத்து.. நிறுத்து.. போன படத்துலயும் இந்த மாதிரி தான் பாட்டு பாடுன.. இந்த படத்துலயும் அதே பாட்டு தான் பாடுற.. ஏன் எப்பவுமே ஒரே மாதிரி பண்ற?
ஜீவா : எந்த பாட்டுன்னா?
பார்வையாளர் : எந்தப் பாட்டா? (சிவகாசியின் 'நீ எந்த ஊரு நான் எந்த ஊரு' பாடலைப் பாடுகிறார்)
ஜீவா : மெட்டு ஒன்னுதாண்ணா.. ஆனா பாட்டு வரியெல்லாம் வேற மாதிரி இருக்கில்ல?
பார்வையாளர் : டேய்! இதுக்குத் தாண்டா அப்பவே எந்திருச்சி வெளிய போறோம்னு சொன்னோம். நீ தாண்டா வலுக்கட்டாயமா எங்கள உக்காரச் சொன்ன..
ஜீவா : நீங்க போறதுன்னா போங்கண்ணா! நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டன்னா என் பேச்சை நானே கேக்க மாட்டேன். ஆடி முடிச்சிட்டுத் தான் விடுவேன்.
பார்வையாளர் : நீ ஆடுறதுன்னா ஆடு. எல்லாரும் தூங்குறது தூங்குறதுதான்.

இப்படி ஒரே ரகளை தான் பேக்கிரியில்.

அடடா! என்னமோ சொல்ல வந்து என்னமோ ஆகிருச்சே! உள்ளூர்த் தொலைக்காட்சியை விடுங்கள். பேருந்துகள் அதுவும் அரசுப் பேருந்துகளில் திருட்டு விசிடியில் என்ன தைரியத்தில் ஒரு புதுப் படத்தை ஒளிபரப்புகின்றனர் என்று தெரியவில்லை. ஒரு வேளை கலைஞர் டிவிக்கு 'போக்கிரி' படத்தின் ரைட்ஸ் எதுவும் கிடைக்கவில்லையோ என்னவோ? எது எப்படியோ அடுத்து சிவாஜி படத்தையும் இப்படி பேருந்துகளில் ஒளிபரப்பினால் ஒரு 50 ரூபாய் லாபம்.

லொள்ளு சபா பேக்கிரி YouTubeலும் இருக்கு. கொஞ்சம் சைடுல பாருங்கள்.

Wednesday, August 01, 2007

உலகம் முழுவதும் உள்ள புத்தக ஆர்வலர்களுக்கு ஓர் நற்செய்தி !

உலகம் முழுவதும் உள்ள புத்தக ஆர்வலர்களுக்கு ஓர் நற்செய்தி. மின் தொகுப்பினால் ஆன புத்தகங்களின் கண்காட்சி http://worldebookfair.com/ என்ற இணைய தளத்தில் உள்ளது. கட்டற்ற (No Copyrights) சுமார் 3,30,000 புத்தகங்கள் இங்கு தொகுக்கப்பட்டிருப்பதாக இந்த இணைய தளம் கூறுகிறது. 100க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ள புத்தகங்கள் இங்கு தொகுக்கப்பட்டிருக்கின்றன.

கணினி சம்பந்தமான புத்தகங்கள் இங்கே உள்ளன. http://worldebookfair.com/Technical_eBook_Colleciton.htm

தமிழ் மின் தொகுப்புப் புத்தகங்களும் இந்த இணைய தளத்தில் உள்ளன. அந்த தளத்தில் தேடினால் கிடைக்கின்றன. இவை அனைத்தும் மதுரை திட்டத்தில் தொகுக்கப்பட்டவையே.

மேலும் தமிழ் மின் தொகுப்பிலான புத்தகங்களை 'மதுரைத் திட்ட'த்தின் இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த தளத்தின் சுட்டி கீழே.

http://www.tamil.net/projectmadurai/akaram_uni.html

'பூங்கா'வில் ஏடிஎம் தொடர் - தமிழ்மணத்திற்கு நன்றி

எனது ஏடிஎம் தொடர்பான இடுகைகள் இந்த வாரம் பூங்காவில் வெளியாகியிருக்கின்றன.

தமிழ்மணத்திற்கும், பூங்காவிற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

http://poongaa.com/content/view/1992/1/