Wednesday, January 31, 2007

கடன் தந்தார் நெஞ்சம்

எங்கள் தாத்தா ஒருமுறை சென்னையில் இருக்கும் எங்கள் தூரத்து உறவு மாமா ஒருவருக்கு 2000 ரூபாய் கடனாகக் கொடுத்திருந்தார்.ரொம்ப நாளாகியும் அவர் திரும்பக் கொடுக்காததால் அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகவும் உடனே அனுப்பி வைக்குமாறும் ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பினார்.

பதிலுக்கு எங்கள் மாமா கோபமாக ஒரு கடிதம் அனுப்பினார். அதில் எங்கள் தாத்தா அவரை அவமானப்படுத்தி விட்டதாகவும் அதற்கு மிக்க நன்றி எனவும் அத்துடன் எங்களுக்கு கணக்கு எதுவும் இல்லாத வங்கி ஒன்றின் வரைவோலை ஒன்றையும் அனுப்பி இருந்தார்.

எங்கள் தாத்தா மிகவும் குழம்பி "என்னடா இது? கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டது அவ்வளவு பெரிய அவமானமா?" என எண்ணி மிகவும் கவலை கொண்டார். பின்பு ஒரு நாள் இன்னொரு உறவினரிடம் இது பற்றிச் சொன்னபோது தான் எங்கள் மாமாவின் கோபத்துக்கான காரணம் புரிந்தது.

சென்னையில் எங்கள் மாமா இருப்பது ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு. எங்கள் தாத்தா எழுதிய அஞ்சல் அட்டை அங்கே ஒரு பொதுவான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதை ஊர்வம்பில் ஆர்வமுள்ள வீட்டுக்காரம்மா எடுத்துப் படித்து விட்டு அதை சுற்றுவட்டாரத்தில் போட்டு விட அதைச் சிலர் எங்கள் அத்தையிடம் போட்டுவிட்டார்கள். விஷயம் மாமா காதுக்குப் போய் இதற்குக் காரணம் அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பிய எங்கள் தாத்தாதான் என முடிவு செய்து அதற்குப் பழி வாங்க முடிவு செய்தததன் விளைவு தான் அந்தத் திட்டுக் கடிதமும், வரைவோலையும்.

விடுவாரா எங்கள் தாத்தா?. அந்த வங்கியிலே கணக்கு ஒன்றையும் ஆரம்பித்து வரைவோலையையும் பணமாக்கிக் கொண்டார்.

கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் - இது கம்பராமாயணம்
கடன்தந்தார் நெஞ்சம் போல் கலங்கினார் காளிமுத்து (எங்க தாத்தா தாங்க) - இது கலிகாலம்

நன்றி : இ-கலப்பை,ப்ளாக்கர் மற்றும் தமிழ்மணம்

7 comments:

நாமக்கல் சிபி said...

இதன் மூலம் அறியப்படும் நீதிகள்:

1. வாராக் கடனைத் திரும்பப் பெற அஞ்சலட்டையில் கடிதம் எழுதணும்.

2. ஊரிலுள்ள எல்லா வங்கிகளிலும் கணக்கு வைத்திருப்பது நல்லது.

3. வாழ்வில் நடந்த எந்தவொரு நிகழ்வையும் அனுபவம் என்ற தலைப்பில் பதிவிடலாம்!

வல்லிசிம்ஹன் said...

பாவம் தாத்தா.
கடன் வாங்கும்போது காணும் இனிமை,திருப்பிக்
கொடுக்கும் போது காணாமல் போவது உலக வழக்கம்.

நல்ல பதிவு.

வடுவூர் குமார் said...

காதலை சொல்வது கூட எளிதாம்..
கொடுத்த கடனை திருப்பிக்கேட்பதிலும்.

நெல்லை சிவா said...

இந்தக் கடன் பற்றி நானும் கூட பதிவிட வேண்டுமென்று நினைத்திருந்தேன், நீங்கள் சொல்வது மிகச் சரி, கடன் கொடுத்தார் நெஞ்சம் போல... :))

dondu(#11168674346665545885) said...

எதற்கு புது வங்கியில் கணக்கு துவங்க வேண்டும்? உள்ளூர் க்ளியரன்ஸ் என்று ஒன்று இல்லையா உங்கள் ஊரில்_ உங்கள் பேங்க்கில் அந்த வரைவோலையைப் போட்டால் அவர்கள் அதை க்ளியரன்சில் போட்டு உங்கள் தாத்தாவின் கணக்கில் ஏற்றி விடுவார்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

dondu mama

neenga verum donda illa poli donda ...

eannaa ... ivvidathae unga joly onnumillaiyae

-queens english

Anonymous said...

// 3. வாழ்வில் நடந்த எந்தவொரு நிகழ்வையும் அனுபவம் என்ற தலைப்பில் பதிவிடலாம்! //

என்ன சிபி, நம்மள கால வாருர மாதிரி தெரியுதே ! :)


// பாவம் தாத்தா.
கடன் வாங்கும்போது காணும் இனிமை,திருப்பிக்
கொடுக்கும் போது காணாமல் போவது உலக வழக்கம்.

நல்ல பதிவு.

//

வாங்க வல்லிசிம்ஹன் ..! வருகைக்கு நன்றி.


// காதலை சொல்வது கூட எளிதாம்..
கொடுத்த கடனை திருப்பிக்கேட்பதிலும்.

//

ஆமா குமார். காலம் அப்படி கெட்டுக் கிடக்கு !


// இந்தக் கடன் பற்றி நானும் கூட பதிவிட வேண்டுமென்று நினைத்திருந்தேன், நீங்கள் சொல்வது மிகச் சரி, கடன் கொடுத்தார் நெஞ்சம் போல... :)) //


அப்படியா சிவா! எப்பவுமே நான் ஒரு முந்திரிக் கொட்டை ! :)

//
எதற்கு புது வங்கியில் கணக்கு துவங்க வேண்டும்? உள்ளூர் க்ளியரன்ஸ் என்று ஒன்று இல்லையா உங்கள் ஊரில்_ உங்கள் பேங்க்கில் அந்த வரைவோலையைப் போட்டால் அவர்கள் அதை க்ளியரன்சில் போட்டு உங்கள் தாத்தாவின் கணக்கில் ஏற்றி விடுவார்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

//

தெரியவில்லை டோண்டு அவர்களே! பதிவில் குறிப்பிட்டபடித்தான் செய்ததாக ஞாபகம்.:)


வருகைக்கு நன்றி அனானி. டோண்டு மீது அப்படியென்ன கோபம் ! :)